சென்னை:'அண்ணா பல்கலை பேராசிரியர்கள் நியமனத்தில், தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை அண்ணா பல்கலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கும் போது தான், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், ஒப்பந்த பேராசிரியர்களுக்கு, பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலை, உலக புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது. அப்பல்கலை, பல ஆண்டுகளாகவே, தற்காலிக ஆசிரியர்களை நம்பித்தான் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் திறமைகளை குறைத்து மதிப்பிடுவது நியாயமல்ல. அண்ணா பல்கலை தற்காலிக ஆசிரியர்களின் திறமையை, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. அனைத்து காலியிடங்களை நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது.
அதற்காக, புதிய பேராசிரியர்களை நியமிக்கும் போது, தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு, அண்ணா பல்கலை சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். பிற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் நியமனங்களிலும், தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் வாயிலாக, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE