சென்னை : தீபாவளி பண்டிகை காரணமாக, விமான டிக்கெட்டுகளின் விலை திடீரென உயர்ந்ததால், விமான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும், நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, அனைவரும் ஆர்வமாக உள்ளனர். பெரும்பாலும் கடைசி நேர பயணம் மேற்கொள்ள விரும்புவோர், விமான பயணத்தை தேர்வு செய்வர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டோருக்கு, விமான டிக்கெட் விலை உயர்வு அதிர்ச்சியாக உள்ளது.தற்போது, பண்டிகை நேரத்தையொட்டி, விமான நிறுவனங்கள், தங்களது விமான சேவைகளை அதிகரித்துள்ளன. அதன்படி, சென்னைக்கு வந்து, செல்லும் உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை, 200 ஆக அதிகரித்துள்ளது.
கட்டணம் அதிகரிப்பு
* சென்னையில் இருந்து மதுரைக்கு, சாதாரண நாட்களில் வழக்கமாக, 2,800 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கட்டணம் இருக்கும். தற்போது, அந்த கட்டணம் இருமடங்காக அதிகரித்து, 6,௦௦௦த்தை தாண்டியுள்ளது. முதல் வகுப்பு கட்டணம், 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது
* சென்னயில் இருந்து துாத்துக்குடிக்கு, 3,௦௦௦ ரூபாயாக இருந்த கட்டணம், 5,௦௦௦ முதல், 7,௦௦௦ ரூபாய் வரை உயர்ந்துள்ளது
* திருச்சிக்கு, 2,500 ரூபாயாக இருந்த கட்டணம், 4,௦௦௦ முதல், 7,௦௦௦ ஆயிரம் ரூபாய் வரையும், சேலத்திற்கு, 2,300 ரூபாயாக இருந்த கட்டணம், 3,900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேபோல, டில்லி, ஐதராபாத், பூனே, கோல்கட்டா, மும்பை, அகமதாபாத், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமான கட்டணங்களும், பண்டிகையை ஒட்டி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமானங்களில், காலியாக உள்ள இருக்கைகள் அடிப்படையில், விமான கட்டணம் வேறுபடும். தீபாவளிக்கு, தங்களது சொந்த ஊர் செல்ல பலர், முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விட்டதால், குறைவாக உள்ள இடங்களுக்கு, தற்போது டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில், குறைந்த விலை டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனையாவது இயல்பானது தான். பண்டிகையை காரணம் காட்டி, டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE