சென்னை:''யார் எதை சொல்ல வேண்டும்; எழுத வேண்டும் என்று கூறுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி கூறினார்.
அவர் அளித்த பேட்டி: ஆட்சி அதிகாரமும், அரசியலும், எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என, முடிவு செய்வது, ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்.மக்களின் கலை வடிவங்கள், சிந்தனைகள் மற்றும் எது இலக்கியங்கள் என்பதை, அரசு தீர்மானிக்கக் கூடாது. ஒரே ஒரு அமைப்பு கொடுத்த புகாரை தொடர்ந்து, அருந்ததிராயின் புத்தகத்தை நீக்குவது ஏற்புடையதல்ல.
யார் எதை சொல்ல வேண்டும், எதை எழுத வேண்டும் என்று கூறுவது, ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. கல்லுாரி மாணவர்களுக்கு எது சரி, எது தவறு என, தெரிந்து கொள்வதற்காக, எதிர் கருத்துக்களும், அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும்.அந்தக் கருத்துக்களை அவர்கள் ஏற்பதா; வேண்டாமா என்பது குறித்து, கல்லுாரியில் விவாதிப்பது தான் ஆரோக்கியமான விஷயம். ஆனால், விவாதமே நாட்டில் இருக்கக் கூடாது என்ற சூழ்நிலைக்கு, நாம் சென்று கொண்டிருப்பது, பன்முகத்தன்மை உள்ள நாட்டிற்கு நிச்சயமாக நல்லதல்ல.இவ்வாறு, கனிமொழி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE