தோர்டோ:“முந்தைய, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, எல்லைப் பகுதி மேம்பாட்டிற்காக, பிரதமர் மோடியின் அரசு, பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கட்ச் மாவட்டத்தில், மத்திய அரசின் எல்லை பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நேற்று நடந்த நிகழ்ச்சி யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.அப்போது, அவர் பேசியதாவது:
எல்லையோர பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. எல்லைப் பகுதி கிராமங்களில், கல்வி, மருத்துவம், தொலை தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் பல வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், எல்லைப் பகுதி கிராமங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரது மரணத்திற்குப் பின், காங்., தலைமையிலான மத்திய அரசு, அவற்றை நிறைவேற்றவில்லை.
பிரதமர் மோடியின் அரசு, படேல் கூறியதை நிறைவேற்றி வருகிறது. கடந்த, 2008 - 2014 காலத்தில், எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள, 170 கி.மீ., நீள சாலைகள் மட்டுமே புணரமைக்கப் பட்டன. ஆனால், 2014 - 2020 காலத்தில், 480 கி.மீ., நீள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.எல்லைப் பகுதி மேம்பாட்டிற்காக, 2020 - 2021 நிதியாண்டிற்கு, 11 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
இதற்கு முந்தைய, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மோடி அரசின்கீழ், பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.முந்தைய காலங்களில் இருந்ததுபோல் அல்லாமல், நம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும், நம் எதிரிகளுக்கு, சரியான பதிலடியை இந்தியா தற்போது கொடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE