சேலம்:இந்திய கிரிக்கெட் அணிக்கு, சேலம் மாவட்டத்தில் இருந்து முதன் முறையாக, வேகப்பந்து வீச்சாளராக, நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
''இந்திய அணி விளையாட்டிலும், நடராஜன் சாதனை படைப்பான்,'' என, அவரது தாய் சாந்தா தெரிவித்தார்.நல்ல எதிர்காலம்ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள, 20:20 போட்டியில், முன்னணி பந்து வீச்சாளர் பும்ராவுடன், நடராஜன் களம் இறங்குகிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன், இன்று, இந்திய அணிக்கு தேர்வானதை, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகமே கொண்டாடுகிறது.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தில் உள்ளது, நடராஜனின் குடும்பம். அங்கு, கோழிக்கறி கடை நடத்தி வரும் அவரது தாய் சாந்தா கூறியதாவது:எங்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். மூத்தவன் நடராஜன். சக்தி என்ற மகனும், திலகவதி, தமிழரசி, மேகலா என்ற மகள்களும் உள்ளனர். திலகவதிக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது.என் கணவர் தங்கராசு, தறி தொழில் செய்து வந்தாலும், கிரிக்கெட் என்றால், ஆர்வமாக பார்க்க கிளம்பி விடுவார்.
நடராஜனுக்கு, ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, கிரிக்கெட்டில் ஆர்வம்.பள்ளி விட்டு வந்தவுடன் பந்து, பேட்டை எடுத்து கிளம்பி விடுவான். பள்ளி, கல்லுாரி படிக்கும் போதே, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசு வாங்கினான்.கூலி வேலை மற்றும் நான் நடத்தி வரும் கோழிக்கறி கடை மூலமாக மட்டுமே வருமானம் இருந்ததால், குடும்பத்தை கஷ்டப்பட்டுதான் நடத்தினோம்.
இருப்பினும், கல்லுாரி முடிந்ததும், ஜெயப்பிரகாஷ் என்பவர், மகனுக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், அனுமதிக்கும் படியும் கேட்டார். மகனின் விருப்பமும் அதுவாகவே இருந்ததால், சம்மதித்தோம்.பாராட்டுஎனக்கு எழுத, படிக்க தெரியாததால், கிரிக்கெட் தெரியாது; பார்த்ததும் இல்லை. நடராஜன் விளையாடுவது, 'டிவி'யில் வந்த பின் தான், பார்க்க துவங்கினேன்.
ஆனாலும், வெற்றி, தோல்வி குறித்து, பிள்ளைகள் கூறினால் தான் புரியும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்போது சூழ்நிலை கனிந்து வரவில்லை. அதன்பின், நடராஜனுக்கு திருமணம் நடந்தது.மருமகளாக பவித்ரா வந்த பின், குடும்ப சூழல் மாறத் துவங்கியது.
நடராஜனுக்கு, பெண் குழந்தைகள் என்றால் உயிர். கர்ப்பமாக இருக்கும் போதிருந்தே, பெண் குழந்தைதான் வேண்டும் என கூறி வந்தான். ஆனால், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட, மூன்று மாதங்களுக்கு முன்பே கிளம்பி விட்டான்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு, இந்த ஆண்டு கிடைத்தது. 'டிவி'யில் விளையாடுவதையும், அவனை பாராட்டுவதை யும் பார்க்கும் போது, பெருமையாக இருந்தது.
கடந்த வாரத்தில் தான், பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவன் அருகில் இல்லையே என்றாலும், விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்ததில், நடராஜனுக்கு மட்டு மின்றி, அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.குழந்தை வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில், இந்திய அணியில் விளையாட தேர்வு பெற்றதாக செய்தி வெளியானது.
பேத்தி வீட்டுக்கு வந்த நேரம், அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவே கருதுகிறோம். இதனால், எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நடந்த முடிந்த போட்டிகளில் கலக்கியது போன்று, இந்திய அணி விளையாட்டிலும், சாதனை படைப்பான்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE