எத்திக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்

Added : நவ 13, 2020
Share
Advertisement
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் தீபாவளியைப் போல் மகிழ்ச்சிதரக்கூடிய இன்னொரு பண்டிகை வரவில்லை. ஒருநாளும் இல்லாத திருநாளாய் அதிகாலையிலேயே துயில் எழுகிறோம். மனம் பரபரக்கிறது! இன்று புதிதாய் பிறந்த இனிய உணர்வு. எழுந்தவுடன் அம்மா அன்போடு இஞ்சித்துண்டும் ஓமமும் மிளகும் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயும் இஞ்சி லேகியமும் தர கங்கா ஸ்நானம் செய்ய தயாராகிறோம். அந்தக்
 எத்திக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்

எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் தீபாவளியைப் போல் மகிழ்ச்சிதரக்கூடிய இன்னொரு பண்டிகை வரவில்லை. ஒருநாளும் இல்லாத திருநாளாய் அதிகாலையிலேயே துயில் எழுகிறோம். மனம் பரபரக்கிறது! இன்று புதிதாய் பிறந்த இனிய உணர்வு. எழுந்தவுடன் அம்மா அன்போடு இஞ்சித்துண்டும் ஓமமும் மிளகும் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயும் இஞ்சி லேகியமும் தர கங்கா ஸ்நானம் செய்ய தயாராகிறோம்.

அந்தக் காலத்தில் செப்புத் தவலையை நன்றாகக் கழுவி விபூதிப் பட்டையும் சந்தனம் குங்குமம் வைத்து அதைப் பெட்டி அடுப்பில் வைத்து கொதிக்கக் கொதிக்க வெந்நீர் தயாராகும்.இப்போது காஸ் அடுப்பில்தான் வெந்நீர்! ஆனாலும் என்ன? அதிகாலையில் நீராடும் பழைய மரபு அப்படியேதானிருக்கிறது.

இருக்கிற பலத்தை எல்லாம் கையில் திரட்டி அம்மா எண்ணெய் தேய்த்துவிடும் அழகு எப்போதும் வெகுநேர்த்தியானது. இருள் விலகி யோடும்படியாக இல்லத்திலும் உள்ளத்திலும் வரிசையாய் தீபங்களின் பேரொளி. கோலம் போட்ட மரப்பலகையில் அமரவைத்துச் சந்தனம் குங்குமம் வைத்துவிட்டுத் தலையில் தொடங்கி உடலெல்லாம் நல்லெண்ணெய் பூசிவிடுகிறாள் அம்மா. ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் எனும் ஐந்து மரத்தின் பட்டைகளையும் வெந்நீரில் கொதிக்கவைத்து மேற்கொள்ளும் எண்ணெய்க் குளியல் அதிஅற்புதமானது. இந்த குளியல் மனசஞ்சலம் போக்குவதாய் இல்லத்தின் வறுமையைப் போக்குவதாய் அமையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


நலம் தரும் நாயகிகள்சீயக்காயும் வெந்தயமும் பாசிப்பயிறும் சேர்த்து தீபாவளி கங்கா ஸ்நானத்திற்காகவே ரைஸ்மில்லில் அரைத்து வைத்த ஸ்நானப்பொடியைக் கைப்பிடி நிறைய அள்ளிப்போட்டு தலையைப் பரபரவென பாட்டி தேய்த்துவிடுவதற்காகவேனும் இந்த தீபாவளி தினமும் வராதா என்று எண்ணத் தோன்றும். 'ஏன் பாட்டி சந்தனமும் குங்குமமும் கங்கா ஸ்நானத்திற்கு முன் வைத்து விடுகிறாய்?' என்று கேட்கத் தோன்றியது, அதைப் புரிந்துகொண்டாரோ என்னவோ, தீபாவளி தினத்தன்று சந்தனத்தில் பூமாதேவியும் குங்குமத்தில் கவுரிதேவியும் வாசம்செய்வதாக பாட்டி விளக்கம் சொன்னார். இந்திய ஆன்மிகத்தின் தொடர்ச்சிதானே தித்திக்கும் இந்தத் தீபாவளித் திருநாள்!தீபாவளி திருநாளன்று நல்லெண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், அரப்பு அதாவது சிகைக்காய்ப் பொடியில் சரஸ்வதியும் வசிகப்பதாக ஐதீகம் என்று பாட்டி சொன்ன விளக்கம் இன்னும் நினைவில்.


கங்கா ஸ்நானம்மழைக்காலக் குளிருக்கு இதமாய் தீபாவளி லேகியம் எனும் இஞ்சிச்சூரணம் எடுத்து பாட்டி ஊட்டுகிறார். கங்கா ஸ்நானத்திற்குத் தயாராகிறோம். அன்று வீட்டு நீர்நிலைகளில் கங்கை வந்து சேர்கிறது. ஆம்! என்ன அதிசயம் தாமிர அண்டாவில் நிரம்பியிருக்கிற குளியலறைத் தண்ணீர் அந்த அதிகாலைப்பொழுதில் கங்கையாய் உருமாறுகிறது. நாம் உள்ளத்தில் நித்தமும் துதிக்கும் கங்கா மாதா நம் இல்லத்தில் எழுந்தருகிறாள் என்பது எத்தனை அற்புதமானது. ஒருவர் பின் ஒருவராய் பொழுது புலர்வதற்குள் கங்காஸ்நானம் செய்கிறோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று ஈசனையும் திருப்பாற்கடல் வாசனையும் நன்றிப் பெருக்கில் மனம் கொண்டாடுகிறது.


தலைதீபாவளிதலைதீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதியினர் வீட்டில் இருந்தால் இன்பம் இன்னும் இரட்டிப்பாகிறது. தலைதீபாவளி கொண்டாடும் தன் மகளையும் மருமகனையும், அவளது மாமனார் மாமியாரைப் பெண்ணின் பெற்றோர் ஒரு மாதத்திற்கு முன்பே பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழத்தோடு சுருள் பணமும் வைத்து அன்போடு அழைக்கும் அழகு தனியழகு. பட்டுச்சேலை சரசரக்க வீட்டிற்கு வரும் மகளை, ஆரத்தி கரைத்து வரவேற்கும் பழக்கம்
இன்றும் இருக்கிறது. தீபாவளித் திருநாளன்று பட்டுச் சேலை பட்டுவேட்டி தந்து அவர்களை உடுத்த வைத்து தலைவாழை இலைபோட்டுத் தேனும் பழமும் வைத்துத் திகட்ட திகட்ட பலகாரங்களை பரிமாறி வசதிக்குத் தகுந்தவாறு பொன்னாபரணங்களை அணிவிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.


புத்தாடைகளில்வீட்டில் உள்ள அனைவர்க்கும் புத்தாடைகள் எடுக்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாம் மேற்கொள்ளும் எத்தனங்கள் சாதாரணமானதா? பாட்டிக்குச் செட்டிநாடு சேலை என்றால், தாத்தாவுக்கு ஜரிகை வேட்டி, அப்பாவுக்கு குர்தா, அண்ணனுக்கு ஸ்டைலாக டீ சர்ட்டும் ஜீன்சும், அம்மாவுக்கும் மனையாளுக்கும் மங்கலகரமாய் பட்டுச்சேலைகள், தங்கைகளுக்குப் பட்டுச்சேலை டிசைனில் சுரிதார் என்று கடைகடையாய் அலைந்து திரிந்து வாங்கிய புத்தாடைகளைப் பூஜையறையில் சுவாமிக்கு முன் தாம்பாளத்தில் அம்மா மஞ்சள்வைத்து அழகாக அடுக்கிவைத்திருக்கிறாள்.உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனை அப்பா பக்திப்பெருக்கோடு பாடிப் பரவுகிறார்.

வழிபாடு முடித்து தீபாராதனை காட்டியபின், தீர்க்காயுசாக மகாராசனாய் இரு! என்று வாழ்த்தியபடி பாட்டியும் தாத்தாவும் புத்தாடைகளை எடுத்துத் தருகிறார்கள். அன்று புத்தாடைகளில் மகாவிஷ்ணு உரைவதாக ஐதீகம். புத்தாடை சரசரக்க, புதுமணம் கமகமக்க பூரிப்புடன் சுவாமிதரிசனம் செய்கிறோம். அதன்பின் தெருவெங்கும்பட்டாசின் ஆர்ப்பரிப்பு. ஒளிப் பூக்களாய் மத்தாப்புகளைக் கொளுத்திக் கொண்டிருக்கும் அழகுக் குழந்தைகள் அன்று நாராயணன் கையிலுள்ள சுதர்சன சக்கரத்தையும் தரையில் தரைச்சக்கரமாய் சுழலவிடும்காட்சி கண்கொள்ளாக்காட்சி. மத்தாப்பின் ஒளிப்பரப்பில் நம் தெருக்கள் ஜொலித்திடுவதை வேறு என்று பார்க்க முடியும்?

மொட்டை மாடியிலிருந்து வாண்டுகள் விடும் ராக்கெட் வழிதவறிப் பக்கத்துவீட்டு மாடியறைக்குள் பாய்வதும், மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற பதற்றத்தில் குழந்தைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவதையும் வேறு எந்தநாளில் பார்க்க முடியும்?


ஒரு மாதம் இனிப்புதீபாவளிப் பலகாரங்களைச் செய்வதற்குப் பெண்கள் ஒருவாரத்திற்கு முன்பே தயாராகித் தன்களுக்கு உதவியாகப் பாகுக்குப் பதம் பார்க்கக் கணவனைப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு பாகு வந்துருச்சா பாகு வந்துருச்சா என்று கேட்டபடி செய்யும் அல்வாவும் ஜாங்கிரியும் நெய் மைசூர்பாகும் மோதி லட்டும் குலோப்ஜாமூனும் எல்லா வீடுகளிலும் ஒருமாதம் இருக்குமே!பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்கள். வாழ்வின் பொருள், பொருள்சேர்த்து வாழ்வது என்பதையும் தாண்டி இறைவனுக்குப் பயந்த பொருள்பொதிந்த வாழ்வை வாழ்வது என்று தெளிவாகக் கற்றுத்தரும் பண்டிகைதானே தீபாவளி.


ஒளித் திருநாள்தான் என்ற அகந்தை அழித்துத் தன்னைப் படைத்த திருமாலின் திருப்பாதங்களைச் சரணாகதி அடைதலே சரியான செயல் என்று நரகாசுரனைக் கொண்டு நாராயணன் உணர்த்திய நாள் தீபாவளித் திருநாள். தீப ஆவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். அறிவுதீபங்கள் வரிசையாக அணிவகுத்தால் அறியாமை இருள் அகன்று அழியும் என்று
உலகிற்கு உணர்த்தும் இனிய திருநாள் தீபாவளித் திருநாள்.மக்களையும் ரிஷிகளையும் கொன்றுகுவித்துக்கொண்டிருந்த நாரகாசுரனை சத்யபாமாவின் உதவியோடு கிருஷ்ணபரமாத்மா வதம் செய்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளித் திருநாள். காட்டு வாழ்வை முடித்துச் சொல்லொணாத் துயரங்களையெல்லாம் அனுபவித்து முடித்த ஸ்ரீராமர், சீதாபிராட்டியாருடன் மீண்டும் மகிழ்ச்சியுடன் அயோத்தி மாநகருக்குத் திரும்பியது இந்தத் தீபாவளி நன்னாளில்தான். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடிந்து சொந்தஊருக்குத் திரும்பியதும் இந்தத் தீபத்திருநாளில்தான்.

அவரவர் மகிழ்வலைகளை அவரவருக்குத் தந்து, நம் அனைவரையும் தித்திக்க வைக்க இதோ நாளை தீபாவளி வந்துவிட்டது. தீமைகள் அகன்று நன்மைகள் மலர்ந்து உலகெலாம் தீப ஒளி
பரவிட உலகைப்பிடித்து ஆட்டும் கொடிய நோய் நொடிகள் எல்லாம் தீபாவளி ஒளியில் இல்லாமல் பொசுங்கிடப் பரமாத்மாவை வேண்டுவோம்.-பேராசிரியர் சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரிதிருநெல்வேலி. 99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X