கோவை மாநகராட்சியிலும், சுற்றியுள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலிருந்தும் குடியிருப்புகளில் அதிகரித்து வரும், வணிகச் செயல்பாடுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிந்து வந்தாலும், அதில் முதலிடத்தில் இருக்கிறது சாய்பாபா காலனி.ராம்நகர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளிலிருந்தும், நிறையப் புகார்கள் வருகின்றன.
ஆனால், சாய்பாபா காலனியிலிருந்து வரும் புகார்கள், 'வேற லெவல்' ஆக இருக்கின்றன.வீதி, வீதியாக அங்கேயுள்ள விதிமீறல்களை, அங்குள்ள மக்கள் புகார்களில் புட்டுப்புட்டு வைக்கின்றனர். சட்டங்கள், விதிமுறைகள் என பலவற்றையும் அறிந்த, ஓய்வு பெற்ற அதிகாரிகள் அங்கே அதிகம் இருப்பதே இதற்குக் காரணம்.ஒரு காலத்தில் அமைதியாக வாழ்வதற்கேற்ற பகுதி என்று ஓய்வூதியர்கள், முதியோர் விரும்பிக் குடியேறிய பகுதியாக, சாய்பாபா காலனி இருந்தது. அப்போது என்.எஸ்.ஆர்., ரோடு மட்டுமே வணிகப்பகுதியாக இருந்தது. வீதிகளில் சிறிய மளிகைக்கடைகள் மட்டுமே இருந்துள்ளன.ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓட்டல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பேக்கரி, அழகு நிலையம், விற்பனை மையம், விடுதிகள் என, இங்கே இல்லை என்று எதுவுமே இல்லை என்கிற அளவிற்கு, வணிகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.அதிலும் குறிப்பாக, என்.எஸ்.ஆர். ரோட்டை ஒட்டியுள்ள வீதிகளிலும், கே.கே.புதுாரிலும் குடியிருப்புவாசிகள் படும் அவதிகள் அளவு கடந்துவிட்டன.இதை அங்குள்ள மக்களே பட்டியல் போடுகிறார்கள்.அருணா கல்யாண மண்டபம் ரோடு எனப்படும், மேனன் சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. அதில் கல்யாண மண்டபத்தை இடித்து விட்டு, புதிதாக ஒரு வணிக வளாகம் கட்டியுள்ளனர். அதிலிருந்து கார்களை ஏற்ற, இறக்க வசதியாக சாலையின் மீது, மிகப்பெரிய சாய்வு தளம் கட்டப்பட்டுள்ளது. இது ரோட்டின் அகலத்தை மேலும் குறைத்துள்ளது.
இதே சாலை, கார் வாஷ், பிரிண்டர்ஸ், புல்லட் ஒர்க் ஷாப் என வரிசையாக, வணிகச் செயல்பாடுகளின் கேந்திரமாகவே மாறி விட்டது. எல்லாக் கடைகளின் முன்பாகவும் இதேபோன்று மேடான சிமென்ட் தளம் அமைத்துள்ளனர்.இதில் இரண்டு புறமும், பலர் கார்களை நிறுத்தி விடுவதால், அந்த வீதியில் வாகனம் ஓட்டுவதே பெரும் சிரமமாக இருப்பதாகக் குமுறுகிறார், நடராஜன் என்ற குடியிருப்புவாசி.சபாபதி ரோடு எனப்படும், சர்ச் ரோட்டிலும் சமீபகாலமாக வணிகச் செயல்பாடுகள் அதிகமாகியுள்ளன. ஒவ்வொரு வீடும் கடையாக உருமாறி வருகின்றன.எந்தக் கடைக்கு வாடிக்கையாளர் வந்தாலும், ரோட்டில்தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பாரதி ஸ்டோர் எதிரில் உள்ள, கிருஷ்ணன் தெருவிலும் இதே பிரச்னைதான்.சாய்பாபா காலனி, கே.கே.புதுார், ராமலிங்கா நகரின் எல்லா வீதிகளிலும் ஐந்து வீடுகள், பத்து வீடுகள் என்று, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதும் அதிகரித்துள்ளது.இடம் முழுவதையும் கட்டடமாகக் கட்டி விட்டு, ரோட்டை இரண்டு அடி வரை ஆக்கிரமித்து, கார்களை ஏற்றி இறக்குவதற்கான சாய்வு தளம் அமைக்கின்றனர். இதுவும் வாகன ஓட்டிகளை வாட்டி வதைக்கிறது.இவற்றில் பெரும்பாலான கட்டடங்களை, மாநகராட்சி டவுன் பிளானிங் அதிகாரிகள் ஆய்வு செய்தால், எந்தக் கட்டடத்தையும் வணிகக் கட்டடமாக மாற்றுவதற்கான, திட்ட அனுமதியை வாங்கியிருக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் அங்குள்ள குடியிருப்புவாசிகள்.
அதேபோன்று, வணிகக் கட்டடத்துக்கான சொத்துவரி, மின் கட்டணமும் செலுத்துவதில்லை என்கின்றனர்.உதவி நகரமைப்பு அலுவலர், பில் கலெக்டர், சுகாதார ஆய்வாளர் என பல்வேறு பிரிவு அதிகாரிகளையும் கொண்ட தனிக்குழுவை, மாநகராட்சி நிர்வாகம் அமைத்து, இத்தகைய கட்டடங்களை ஆய்வு செய்து, விதிமீறல் இருப்பின் இடித்து அகற்ற வேண்டியது அவசர அவசியம். இது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும். -நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE