திருப்பூர்:ஏற்கனவே 'நீட்' இலவச பயிற்சி பெற்றவர்களும் மீண்டும் பயிற்சி பெறலாம் என்பதால், அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.'நீட்' மற்றும் 'ஜே.இ.இ.,' தேர்வுகளுக்காக, 2017 முதல், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 'நீட்' பயிற்சிக்காக, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள், கடந்த 9ம் தேதி முதல், இணையவழியில் நடத்தப்படுகிறது.இந்தாண்டு பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, ஏற்கனவே பயிற்சி பெற்ற அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களுக்கும் மீண்டும் பயிற்சி வழங்கப்படுகிறது.முன்னாள் மாணவர்கள் சிலர் கூறியதாவது:தனியார் பள்ளி மாணவர்கள், தொடர் பயிற்சி மூலம், 'நீட்', 'ஜே.இ.இ.,' தேர்வுகளில், வெற்றி பெறுகின்றனர். ஓராண்டு தேர்வில் வெற்றிபெற முடியாதவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிற்சி பெற்று, இறுதியில், வெற்றி பெறுகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.தற்போது, ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள், மீண்டும் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அதிகளவில், 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும் என்பது மகிழ்ச்சி. இலவசப்பயிற்சி என்பதால், இரண்டாவது முறை பயிற்சி பெறுவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE