சூலுார்:'சிறு விபத்துகள் கூட நடக்காமல், தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்' என, தீயணைப்பு துறையினர், சூலுார் பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.சூலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீ விபத்தில்லாமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவது குறித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கலங்கல் சாலை, மார்க்கெட் சாலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.நிலைய அலுவலர் கோபால் கூறியதாவது;பட்டாசுகளை கொண்டு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், காஸ் குடோன்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை, நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடங்களில் வெடிக்க வேண்டாம். சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது, பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும்.தண்ணீர் பக்கெட் அருகில் வைத்திருக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை காலால் மிதிக்க கூடாது. குடிசைப்பகுதி, ஓலையிலான கூரைகள் உள்ள இடங்களுக்கு அருகில், புஸ்வாணம், ராக்கெட் ஆகியவற்றை வைக்கக் கூடாது. தீக்காயம் பட்டால், அந்த இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி சுத்தப்படுத்திவிட்டு, மருத்துவமனை செல்லலாம். விதிகளை பின்பற்றி, விபத்தில்லா தீபாவளியை வீடுகள்தோறும் கொண்டாடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE