பந்தலுார்:பந்தலுார் பகுதியில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திட்டத்தில்ஏற்பட்ட குளறுபடியால், நிதி கிடைக்காமல் மக்கள் அவதிஅடைந்து வருகின்றனர்.மத்திய அரசின் திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் வாயிலாக, குடிசைகளை முழுமையாக அகற்றும் வகையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குடியிருப்புகளை பயனாளிகள் சொந்தமாக கட்டி கொள்ள வேண்டிய நிலையில், சில இடங்களில் பயனாளிகள் ஏழைகளாக உள்ளதால், ஒப்பந்தாரர்கள் மூலமும் கட்டி தரப்படுகிறது.பயனாளிகள் குடிசை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி, 300 சதுர அடி பரப்பளவிற்கு குறையாமல் கான்கிரீட் தளம் போட்ட வீடு கட்டப்பட வேண்டும்.அரசு மானியமாக, 2.10 லட்சம் ரூபாய், 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதற்காக, கூடலுார், பந்தலுார் பகுதிகளை கண்காணிக்க, ஒரு உதவி பொறியாளரும், தற்காலிக பணி மேற்பார்வையாளரும் பணியாற்றி வருகின்றனர்.திட்டத்தின்படி, குடியிருப்பின் அடித்தளம் அமைத்த பின்னர், பயனாளி புகைப்படம் வழங்கினால், 50ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும். 'லிண்டில், கான்கிரீட்' தளம் நிறைவுபெற்ற பின்னர், தலா, 50 ஆயிரம் வீதமும், பணிகள் நிறைவு பெற்ற பின்னர், 60ஆயிரம் ரூபாய் வழங்கப்பகிறது.இந்நிலையில், பந்தலுாரில் அதிகாரிகள்; மேற்பார்வையாளர்கள் இணைந்து, பணிக்கான உத்தரவு கிடைத்தவுடன், 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் ஒரு பயனாளிகளிடம் 'கவனிப்பு' வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'முதல் கட்ட பணம் பெற வேண்டுமானால், அவர்கள் கூறும் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்; தவறினால் பணி ரத்து செய்யப்படும்,' என, உத்தரவு வழங்கும் நிர்வாகிகள் கூறி வருவதாகவும் புகார் உள்ளது. இதை தவிர, ஏழைகளுக்கான இந்த திட்டம், வசதி படைத்தவர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பந்தலுார் சேலகுன்னார் பகுதியில், பழங்குடியின மக்களின் வீட்டு பணிகள் நிறைவு பெற்று நான்கு மாதங்களாகியும், இதுவரை முதற் கட்ட நிதி கூட வரவில்லை. இதனால், வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் சிக்கலில் சிக்கும் அபாயம் உள்ளது. இதே போல, பல இடங்களிலும் பாதிப்புகள் உள்ளன. மேலும், வீடு கட்டும் ஆர்வத்தில், முன்பணம் கொடுத்த ஏழைகள் பலரும், அரசின் நிதி கிடைக்காமல் அவதியடைந்தும் வருகின்றனர். பலரும் அடித்தளத்துடன் பணி நிறுத்தப்பட்டு காத்திருக்கின்றனர். இதனால், மத்திய அரசின் நல்ல திட்டம் ஏழைகளுக்கு பயன் இல்லாத திட்டமாக மாறி வருகிறது. இது குறித்து, மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட பலரும் மனு அளித்தும் பயனில்லை.குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் விவேக் கூறுகையில்,'' பொதுவாக ஆவணங்களை சரிபார்த்த பின்பு தான், வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த புகார்கள் குறித்து, குறிப்பிட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE