பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ரோடு மேம்பாட்டு திட்டத்தில் ஏற்பட்ட சொதப்பலால், தனியார் பஸ்கள் தவறான திசையில் இயக்கப்பட்டு, விபத்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு பகுதி, தேசிய நெடுஞ்சாலை துறையால், முக்கிய ரோடுகள் சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விரிவாக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, கோவை வழித்தடத்தில், 450 மீட்டர்; பொள்ளாச்சி வழித்தடத்தில், 450 மீட்டருக்கு, நான்கு வழிச்சாலையின் ஒவ்வொரு பகுதியும், 7.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 10 - 12 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.விரிவுபடுத்தப்பட்ட பகுதியில், ஏற்கனவே இருந்த 'சென்டர் மீடியனில்' மாற்றம் செய்யப்படுகிறது. வடக்கிபாளையம் ரோட்டில் இருந்து வந்து, பொள்ளாச்சியை நோக்கி திரும்பும் வழித்தடத்தை அடைத்து 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி செல்பவர்கள், கோவை ரோட்டில் சிறிது துாரம் சென்று, 'யு டேர்ன்' செய்ய வேண்டும். கோவை ரோட்டில் இருந்து வந்து வடக்கிபாளையம் ரோட்டிற்கும் திரும்ப, 'யு டேர்ன்' செய்ய இடைவெளி விடப்பட்டுள்ளது.இந்த இடைவெளி அளிக்கப்பட்டுள்ள இடங்கள் இரண்டு இடங்களுமே, விபத்து அபாயம் மிக்க பகுதிகள் என்பதால், இந்த மேம்பாட்டு பணி கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், மேம்பாட்டு பணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், 'யு டேர்ன்' செய்து வர விரும்பாத தனியார் பஸ் ஓட்டுனர்கள், பஸ்சை தவறாக எதிர்திசையில், ஒரு வழிப்பாதையில் இயக்கி, எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றனர்.இப்பிரச்னைக்கு திர்வு கண்டு கட்டுப்படுத்தாவிட்டால், அனைத்து வாகனங்களுமே எதிர்திசையில் இயக்கப்பட்டு, வடக்கிபாளையம் பிரிவு விபத்து மையமாக மாறி விடும் அபாயம் உள்ளது.எனவே, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். வட்டார போக்குவரத்து அதிகாரிகள், விதிமீறும் தனியார் பஸ்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சர்ச்சைக்குரிய அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றி, வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE