உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள விதைப்பண்ணைகளில், விதைச்சான்று துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.குடிமங்கலம் வட்டாரம், சோமவாரபட்டியில், விவசாயி பழனிசாமி, ஏழு ஏக்கர் பரப்பளவில், உளுந்து வம்பன்-8 ரக விதைப்பண்ணை அமைத்துள்ளார். அதனை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் கூடுதல் வருவாய் என்ற அடிப்படையில், பயறு வகை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக மகசூல், நோய் எதிர்ப்பு திறனுடையது என, சாகுபடியில் விதை தேர்வு மிக முக்கியமானதாகும்.வேளாண் பல்கலை ஆண்டு தோறும் பல்வேறு ரக விதைகள் அறிமுகப்படுத்தி வருகிறது. புதிய ரக விதைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.குடிமங்கலம் வட்டாரத்தில் ஆண்டு தோறும், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு வகை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், உளுந்து, தட்டை, கொண்டைக்கடலை பிரதானமாக உள்ளது.விதைகளில் கலப்பில்லாத, அதிக புறத்துாய்மை, முளைப்புத்திறன், ஒரே சமயத்தில் அறுவடை, அதிக மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி உடைய விதைகள் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதியில், 25 ஏக்கர் பரப்பளவில் உளுந்து விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.உரிய பருவங்களில் விதைச்சான்று துறை அதிகாரிகள் கண்காணித்து, தரம் உறுதி செய்யப்படும் பண்ணையிலுள்ள பயிர்கள் அறுவடைக்கு அனுமதியளிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்ற, விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, முறையான பரிசோதனை செய்து, தரமான விதைகளுக்கு சான்று வழங்கப்படுகிறது.தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால், அதிக மகசூல் கிடைக்கிறது.இவ்வாறு, விதைச்சான்றுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE