கோவை,:லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியை தொடர்ந்து, கோவை சார் பதிவாளர்களில் பலர், உடல் நிலையை காரணம் காட்டி, விடுப்பு எடுத்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், ராஜவீதி, காந்திபுரம், சிங்காநல்லுார், பீளமேடு, வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், சூலுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, 17 இடங்களில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன.
கடந்த, 7ம் தேதி, கோவை ராஜ வீதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் இருந்து, கணக்கில் வராத தொகையாக, 2 லட்சத்து, 86 ஆயிரத்து, 800 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, ஒரு பத்திரஎழுத்தர், லஞ்ச பணம் கொடுக்க வந்தார். இது, பத்திரப்பதிவு வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக, லஞ்ச ஒழிப்பு சோதனை தீவிரமடைந்துள்ள நிலையில், சார்பதிவாளர்கள் பலரும், உடல் நிலையை காரணம் காட்டி, அலுவலகம் வருவதை தவிர்த்து வருகின்றனர். சிலர், பணிக்கு வந்தாலும், வேறொரு காரணத்தை கூறி, அலுவலகத்தை விட்டு, சீக்கிரமாகவே வெளியேறி விடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக, 10க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், சார்பதிவாளர் இல்லாமல், கண்காணிப்பாளர் அல்லது உதவியாளர்களால், பத்திரப்பதிவு பணி மேற்கொள்ளப்படுகிறது.மாவட்ட பதிவாளர் சுரேஷிடம் கேட்டபோது, ''ஒருவருடைய மனைவிக்கு புற்றுநோய், ஒருவருக்கு கொரோனா, ஒருவருக்கு மூட்டு வலி, இன்னொருவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். தற்காலிக விடுப்பு எடுத்திருந்த சிலர், பணிக்கு திரும்பி விட்டனர். கள ஆய்வுக்காக, மதியத்துக்கு பின், சிலர், வெளியே சென்றிருக்கலாம். விடுமுறைக்கான சரியான காரணத்தை கூறாவிட்டால், 'மெடிக்கல் போர்டு'க்கு தெரியப்படுத்தப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE