சேத்தியாத்தோப்பு; கீரப்பாளையம் வட்டாரத்தில் விவசாயிகள் சம்பா நடவு செய்த நெற் பயிர்களை தாக்கும் ஆனைக் கொம்பன் ஈ யை தடுக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்தரா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கீரப்பாளையம் வட்டாரத்தில் நிலவும் சீதோஷ்ணத்தால் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்கி, மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த ஈ வகையை சார்ந்த பூச்சி, மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் கொசு போன்று மெல்லிய கால்களுடன் இருக்கும். ஈ தாக்குதல் ஏற்படும் நெற்பயிரில் சோலை துார்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். கிளைப்புகள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஈ தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் அறுவடை செய்த பின் புழுதி உழவு செய்து களைகள் இல்லாமல் துாய்மையாக வைக்க வேண்டும். கைவினை முறையான விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் முறையை பின்பற்ற வேண்டும். ஈ தாக்குதலை சமாளிக்க, அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட குறுகிய கால ரகங்களை பயிரிட வேண்டும். ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தயோமீதாக்ஸாம் 25 , டபூள்யூஜி 40 கிராம், பிப்ரோனில் 5 , எஸ்.சி., 500 மி.லி ஆகிய ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE