புதுச்சேரி; ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலக ஆணை யர் ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை பதிவு செய்ய பல்வேறு வழிகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்த வழிமுறைகள், தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சமயத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க உதவும். அனைத்து ஒய்வூதியதாரர்களும் கணினி வழியாக, ஜீவன் பிரமான் பத்ரா ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்ய வேண்டும். இப்போது கணினி வழி ஆயுள் சான்றிதழை ஆண்டிற்கு ஒருமுறை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது பதிவு செய்த தேதியில் இருந்து ஒரு ஆண்டிற்கு செல்லும்.அக்டோபர் - 2020ல் ஓய்வூதியம் வழங்க ஆணை பெற்றவர்கள், ஆணை பெறப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டிற்கு ஜீவன் பிரமான் பத்ரா ஆயுள் சான்றிதழை பதிவு செய்ய தேவையில்லை.ஜீவன் பிரமான் பத்ரா ஆயுள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தங்களின் வங்கி கிளை அல்லது பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். பதிவின் போது தங்களின் பிபிஓ., நம்பர், ஆதார் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.மேலும், அஞ்சல் துறையும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கி என்ற பெயரில் ஓய்வூதியதாரரின் வீட்டிற்கே செல்லும் சேவையை துவங்கி உள்ளது. இதற்கான சேவை கட்டணமாக ரூ.70 அஞ்சல் துறைக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE