சென்னை; நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அழிவின் விளிம்பில் இருந்த ராமாபுரம் ஏரி, துார் வாரப்பட்டு, கரை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு, ராமாபுரத்தில், சர்வே எண், 239/2க்கு உட்பட்ட, 17 ஏக்கர் பகுதி, ராமாபுரம் ஏரி என, வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஒரு காலத்தில், விவசாயத்திற்கு பயன்பட்ட இந்த ஏரி, தற்போது ஆக்கிரமிப்பால், 5 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி உள்ளது. ராமாபுரம் ஏரியில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து, 2012 முதல், தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.
ஒப்படைப்புஇந்த ஏரி, எந்த துறை பராமரிப்பில் உள்ளது என்பதே, ஆரம்பத்தில் பெருங்குழப்பமாக இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஏரிக்கு யார் பொறுப்பு என்ற குழப்பங்கள் நீங்கி, 2015 ஏப்ரலில், ராமாபுரம் ஏரி, சென்னை மாநகராட்சி வசம், முறையாக ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், ஏரியை சர்வே செய்து, 9 லட்சம் ரூபாய் செலவில் வேலி அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே, அந்த வேலி மாயமானது.இந்நிலையில், ராமாபுரம் ஏரியில், கழிவு நீர் கலப்பதாக, நம் நாளிதழில் மீண்டும் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, 2016 ஜூலையில், ஏரியை சுத்தம் செய்யும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் துவக்கியது.அதன்பின், 2017ல், 94 லட்சம் ரூபாய் செலவில், ஏரியைச் சுற்றி சுவர் எழுப்பி, நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.ஆனால், அந்த பணிகள் நடக்கவில்லை. ஏரி கரையோரம் ஆக்கிரமிப்பாக இருந்த, 24 கட்டடங்களில், 54 கடைகளும், 24 வீடுகளும், 2018 ஏப்ரலில் இடித்து தள்ளப்பட்டன.2019 ஜூலையில், ராமாபுரம் ஏரியை, 88 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரி, கரையமைத்து, நடைபாதை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது.தடைபட்டதுஏரி துார் வாரும் பணி, மழை, கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவ்வப்போது தடைபட்டது.இந்நிலையில், ஏரியில் நீர் மிஞ்சியுள்ள பகுதியை துார் வாரி, கரையமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ஏரியின் முகப்பில், பூங்கா மற்றும் பசுமைவெளி அமைக்கும் பணிகள் மட்டும் மீதமுள்ளன.இந்த ஏரி உட்பட, வளசரவாக்கம் மண்டலத்தில், சீரமைப்பு பணிகள் முடிந்த ஐந்து குளங்களையும், முதல்வர் இ.பி.எஸ்., காணொலி வாயிலாக, சமீபத்தில் திறந்து வைத்தார். இந்நிலையில், ராமாபுரம் ஏரியை, நேற்று முன்தினம் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பார்வையிட்டார்.நடைபாதை மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஐந்து குளங்கள்சீரமைப்பு!வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, ராமாபுரம் ஏரி, ஆலப்பாக்கம் ஏரி மற்றும் ஏழு குளங்களை துார் வாரி கரையமைக்க, மாநகராட்சி மழை நீர் வடிகால் துறை மூலம், 20 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. இப்பணிகளை, பிப்ரவரியில், அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். இதில், 89 லட்சம் ரூபாய் மதிப்பில் போரூர், ஆஞ்சநேயர் கோவில் குளம்; 17 லட்சம் ரூபாயில், ராமாபுரம் ஆலங்குளம்; 36 லட்சம் ரூபாயில் மதுரவாயல், கங்கையம்மன் கோவில் குளம்; 22.14 லட்சம் ரூபாயில், அப்பாதுரை குளம்; 1.4 கோடி ரூபாயில், வானகரம் லிங்க குளம் என, ஒரு ஏரி மற்றும், ஐந்து குளங்கள் துார் வாரப்பட்டு கரையமைக்கப்பட்டன.இக்குளங்களில், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள, நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE