வேளச்சேரி; வேளச்சேரியில், சாலை துண்டிப்பு அனுமதி இழுபறி ஆனதால், கழிவு நீர் குழாய் அடைப்பு சரி செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.அடையாறு மண்டலம், 174 மற்றும் 177வது வார்டு, வேளச்சேரி, நேரு நகர், காந்தியார் தெரு, பெரியார் நகரில் உள்ள, 25 தெருக்களில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள, வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேதாஜி நகர் சாலையில் உள்ள, பெரிய குழாய் வழியாக, கழிவு நீர் வெளியேற்று நிலையம் செல்கிறது.நேதாஜி நகரில் உள்ள, குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், குடியிருப்புகளில் கழிவு நீர் தேங்கியது. மழைநீருடன், கழிவு நீர் தேங்கியதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டது.இதை தடுக்க, பெரிய குழாயில் உள்ள அடைப்பை சரி செய்ய, குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, மாநகராட்சியில் சாலை துண்டிப்பு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.வார்டு பொறியாளர், அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்பு செய்ததால், அடைப்பு சரி செய்யும் பணி தாமதமானது.இந்நிலையில், இருதினங்களுக்குமுன், கழிவு நீர் பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, குடிநீர் வாரியம் அடைப்பு பகுதியை கண்டறியும் பணியை துவங்கியது.ஆனால், மழையுடன் பணி செய்வதால், அடைப்பு சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:குழாய், 15 அடி ஆழத்தில் உள்ளது. சாலையில் அதிகமாக தேங்கும் மழைநீர், கழிவு நீர் குழாயில் திருப்பி விடப்படுகிறது.இதன் காரணமாகவும், மண் சரிவு ஏற்படுவதாலும், அடைப்பு சீரமைப்பு பணியை கவனமாக செய்ய வேண்டி உள்ளது. அனுமதி கேட்டதும் தந்திருந்தால், மழைக்குமுன் பணியை துவங்கி முடித்திருப்போம்.பாதுகாப்புடன், பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பணி முடிய, ஒரு வாரம் வரை ஆகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE