தாம்பரம்; ரயில்வே மேம்பாலத்தில், எதிர்ப்பை மீறியும், அனுமதி இன்றியும், அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து சுவர் விளம்பரம் செய்து வருவதாக, புகார் எழுந்து உள்ளது.சென்னை அடுத்த தாம்பரம் ரயில்வே மேம்பாலம், மேற்புறத்தில் உள்ள சுவரில், தாம்பரம் நகராட்சியால், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு இருந்தது.இந்த ஓவியம் முழுதும், நேற்று முன்தினம் காலை அழிக்கப்பட்டு, வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டு இருந்தது.தாம்பரம் நகராட்சி பொறியாளர் கணேசனிடம் கேட்டபோது, 'மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்றே, ஒவியம் வரையப்பட்டு இருந்தது.'ஆனால், அனுமதியின்றி, ஓவியம் அழிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், புதிதாக யாரும் சுவற்றில் ஓவியம் வரையக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளனர்' என்றார்.சம்பந்தப்பட்ட சுவர் உள்ள பகுதி, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள், ரயில்வே கட்டுப்பாட்டில் வருவதாக, கூறினர்.அதேநேரம், ரயில்வே நிர்வாகம், தாம்பரம் ரயில்வே போலீசார் என, யாரிடமும் அனுமதி பெறாமல், தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர், சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போதுள்ள கொரோனா பாதிப்பிற்கு இடையில், நோய் விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை விட, தனிப்பட்ட கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர் எழுதப்பட்ட ஓவியம் தான் முக்கியமா என்ற கேள்வியை, இது எழுப்பியுள்ளது.இதுபோன்ற, அறிவு ஜீவிகள் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE