ஈரோடு: தீபாவளிக்கு இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில், நேற்று ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடை போன்றவை உள்ள, ஈரோட்டின் பிரதான வீதிகளில் அதிக அளவில் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் காணப்பட்டது.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசும் அதற்கு அடுத்தபடியாக ஆடம்பரமான ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதுமாகவே காணப்படும். இந்தாண்டு கொரோனாவால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து காணப்பட்டாலும், கடந்த சில நாட்களாக ஜவுளி, நகைக்கடை, பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தவிர, நேற்று முதல் விசைத்தறி, ஜவுளி சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டு, போனஸ், சம்பள முன்பணம் போன்றவை வழங்கப்பட்டதால், நேற்று பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அத்துடன், வெளியூர் செல்லும் சிறப்பு பஸ்கள் நேற்று முழுமையாக இயங்க துவங்கியதால், பஸ் ஸ்டாண்டிலும் நகரக்கூட முடியாத அளவு பயணிகள் கூட்டமாக காணப்பட்டனர். இன்று அதைவிட கூடுதலான கூட்டம் காணப்படும், என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், கூடுதல் விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகளிடமும் ஏற்பட்டுள்ளது. மழை இல்லாததால், ரோட்டோர கடைக்காரர்கள் கூட, வழக்கத்தைவிட நல்ல விற்பனையை எதிர் கொண்டதை காண முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE