வாணியம்பாடி: கடந்த, 117 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று வெள்ளத்தில், 200 பேர் இறந்த நினைவு தின அஞ்சலி நேற்று நடந்தது.
ஆங்கிலேயர் காலத்தில், பாலாற்றில், 1903ல் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருந்தது. பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலம், சிக்பெல்லாபூர், கோலார் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பேத்தமங்கலம் ஏரி கரைகள் உடைந்தன. அங்கிருந்த வெள்ளம், திருப்பத்தூர் மாவட்டம் கொடையாஞ்சி வழியாக, வாணியம்பாடி பகுதி பாலாற்றுக்கு நவ., 12ல் அதிகாலை நகரை சுற்றி வளைத்தது. இதில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த, 200 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது குறித்து அன்றைய ஆங்கிலேய கவர்னர் கர்சன் பிரபு, அன்றைய ஆங்கிலேய அரசர்-7ம் எட்வர்டுக்கு தந்தி கொடுத்து விட்டு, விரிவாக அறிக்கை சமர்பித்தார். இந்த சம்பவம், அப்போது உலகம் முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் பயனீர், செய்லி மிரர், அமெரிக்காவில் இருந்து வெளிவந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கால், பெண்டிகே, நியூயார்க் டைமஸ் ஆகிய நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளி வந்தது. இதையடுத்து இறந்த, 200 பேரின் நினைவாகவும், பெருவெள்ளத்தின் சாட்சியாகவும் அன்றைய ஆங்கிய கலெக்டர் தாமஸ், வாணியம்பாடி சந்தை மேடு பகுதியில் நினைவு தூண் அமைத்தார். அது இன்றும் உள்ளது. அதில் வெள்ள அளவின் குறியீடுகளும் உள்ளன. 117 ஆண்டுகளுக்கு முன்பு, பாலாற்று வெள்ளத்தில், 200 பேர் இறந்த நினைவு தினம் நேற்று வந்தது. கொரோனா தொற்று பாதிப்பால், குறைந்தளவு மக்களே நினைவு அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE