தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுக்கும் மக்களிடம் கைவரிசை காட்ட, ஒரு கும்பல் களம் இறங்கி உள்ளதாக கிடைத்த தகவலால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மக்களையும் உஷாராக இருக்க எச்சரித்துள்ளனர்.
நாளை தீபாவளியை முன்னிட்டு, மக்கள், பொருட்கள் வாங்க, தமிழக முக்கிய நகரங்களில் உள்ள கடைவீதி, சந்தை, மார்க்கெட்டுகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி, ராம்ஜி நகர், ஆந்திராவின் குப்பம் ஆகிய இடங்களில் இருந்து, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தலா, 10 பேர் கொண்ட கும்பல் களம் இறங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இக்கும்பல், இரு நாளாக, சிறு அளவில் கைவரிசை காட்டிய நிலையில், இன்றும், நாளையும் பெரிய அளவில் கைவரிசை காட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், மாநகர, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், உயரதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, தமிழக முக்கிய நகரங்கள் அனைத்திலும், இன்று போலீசார் உஷார்படுத்தப்பட்டு, விடிய, விடிய கண்காணிப்பை தீவிரப்படுத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர்கள் கூறுகையில், 'உள்ளூரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். அதேநேரம், ராம்ஜி நகர், குப்பம் பகுதியில் இருந்து, ஊடுருவியவர்களின் பழைய படங்களை வைத்து, அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம்' என்றனர்.
சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் மட்டுமின்றி, வங்கி, நிதி நிறுவனம், அதன் ஏ.டி.எம்., மையங்களை குறி வைத்து, ஒரு கும்பல் கைவரிசை காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், சேலத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்கள், பஸ்களில், ஆண் போலீஸ் மட்டுமின்றி பெண் போலீசாரும், சாதாரண உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர். அத்துடன், கடைவீதி, பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொருட்களை வாங்க செல்லும்போது, தங்கள் கவனத்தை எக்காரணம் கொண்டும் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் தெரிய வந்தால், உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE