சென்னை: சென்னை, யானைக்கவுனியில், மாமனார், மாமியார் மற்றும் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில், தமிழக போலீசார் காரில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). அவர் மனைவி புல்ஷா பாய்(70). இவர்கள் மகன் ஷீத்தல்(40), மூவரும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல்தளத்தில் வசித்தனர். 3 பேரும்,நேற்று முன்தினம்(நவ.,11) துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் உட்பட 6 பேர் கும்பல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. விசாரணையில், ஜெயமாலா சுட்டுக்கொன்றது தெரியவந்தது. ஷீத்தலிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததும், இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவிலிருந்து உறவினர்களுடன் ஜெயமாலா சென்னை வந்துள்ளார். அப்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயமாலாவை பிடிக்க போலீசார், புனேவுக்கு விரைந்தனர். இன்று ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரட்டி பிடித்தோம்
கைது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: சென்னையில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போலீசார் நமக்கு உதவி செய்துள்ளனர். ஜெயமாலாவின் உறவினர்கள் திட்டமிட்டு 3 பேரையும் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழகத்தை சேர்ந்தது கிடையாது. வெளியில் இருந்து வந்தது. லாக்கார் காணவில்லை என தெரிவித்துள்ளனர். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் மேலும் 3 பேரை தேடி வருகிறோம். அவர்கள் குறித்து விவரம் விரைவில் தெரிவிக்கப்படும். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசார் வருவதை அறிந்த, குற்றவாளிகள், புனேயில் இருந்து சோலாப்பூருக்கு காரில் தப்பி சென்றனர். சென்னை போலீசார், விரட்டி சென்று அவர்களை பிடித்தனர். ஜெயமாலாவுடன் அவரது சகோதரர்கள் கைலாஷ் ரவிந்திரநாத், விஜய் உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE