லக்னோ: தேசிய பொதுச் செயலாளராக்கப்பட்ட பின் பிரியங்கா தலைமையில் உத்தர பிரதேச காங்கிரஸ் சந்தித்த முதல் இடைத்தேர்தலில் 4 இடங்களில் டெபாசிட் பறிபோனது. போட்டியிட்ட 6 இடங்களிலும் தோல்வியை தழுவியது.
பீஹார் சட்டமன்ற பொதுத் தேர்தலுடன் பல மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றன. உ.பி.,யில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதான கட்சிகள் அனைத்தும் தனியே தனியே போட்டியிட்டன. 6 இடங்களை பா.ஜ.க., கைப்பற்றியது. ஒரு இடத்தை சமாஜ்வாதி கட்சி தட்டிச் சென்றது. ஆனால் பிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., நிலைமை தான் பரிதாபகரமானது. ஒரே ஆறுதலாக பங்கர்மாவ் மற்றும் காதம்பூரில் ஆகிய இடங்களில் மட்டும் காங்., இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மற்ற நான்கு இடங்களில் சொற்பமான வாக்குகளையே பெற்று டெபாசிட் இழந்துள்ளது.
சுயேட்சை வேட்பாளர்களே பல இடங்களில் காங்கிரஸை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். புலந்த்சர் தொகுதியில் நின்ற காங்., வேட்பாளர் சுஷில் சவுத்ரி 5.1% வாக்குகளுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கட்சி பெண் உறுப்பினரை தாக்கியதாக சர்ச்சையில் சிக்கிய தியோரியா வேட்பாளர் முகுந்த் பாஸ்கர் 2% வாக்குகள் மட்டுமே பெற்று 5-ம் இடத்துக்கு சென்றார். அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் காங்., வேட்பாளரை காட்டிலும் 6 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதே போல் மல்ஹானி மற்றும் நாகாவன் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் வெறும் 1.3% மற்றும் 2.2% வாக்குகளுடன் படுதோல்வி கண்டுள்ளனர்.

காங்., தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகியவுடன் கட்சியை வழி நடத்த பிரியங்கா தான் சிறந்த தேர்வு என சிலர் கூறினர். அவரும் உ.பி., முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்த்து தினமும் பேட்டி, அறிக்கை வெளியிட்டு ஊடக வெளிச்சத்திலேயே இருந்தார். ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த சம்பவத்தை தேசியளவில் கொண்டு சென்றனர். பெண்களுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என பிரசாரம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் காங்., டெபாசிட் இழந்துள்ளது, களத்தில் பணியாற்ற கட்சிக்கு ஆட்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE