சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரப்பா, இது பற்றி தனக்கு கவலையில்லை. எதையும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழுவை அமைத்துள்ள தமிழக அரசு, 3 மாதங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கு சிறப்பு தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவதூறு புகார்கள்
இது தொடர்பாக சூரப்பா கூறுகையில், தமிழக அரசின் விசாரணை பற்றி எனக்கு கவலை இல்லை. எதையும் சந்திக்க தயாராக உள்ளேன். என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறதா என்பதை கல்வியாளர்கள் தான் தெரிவிக்க வேண்டும். கவர்னர் உள்ளிட்ட யாரையும் நான் சந்திக்க போவதில்லை. புகார்கள் மூலம் அண்ணா பல்கலைக்கான எனது பணிகளுக்கு இடையூறு செய்ய முடியாது.
அண்ணா பல்கலை நியமனத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக பெறவில்லை. பணி நியமனத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு அடி பணியாததால் என் மீது அவதூறு புகார்களை கூறுகின்றனர். பெயர் குறிப்பிடாத சில மிரட்டல் கடிதங்களும் எனக்கு வந்துள்ளன. எனது வங்கிக்கணக்கு விவரங்களை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE