கரூர்: ''முருங்கை, வெற்றிலை, வாழை ஆகியவற்றுக்கு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
முருங்கை, வெற்றிலை மற்றும் வாழைக்கு பதப்படுத்தும் மையங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வேளாண் வணிகத்துறை ஆணையர் சுன் சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் கூறியதாவது: மாவட்டத்தில் அதிகம் விளையக்கூடிய முருங்கை, வெற்றிலை மற்றும் வாழை ஆகிய பயிர்களுக்கு பதப்படுத்தும் மையம் அமைத்து தர வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதனடிப்படையில், தமிழ்நாடு வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் மூன்று முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைப்பதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி தாலுகா கொடையூரில், 1.48 ஏக்கரில் முருங்கைக்கும், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் வடக்கு கிராமத்தில், 2.6 ஏக்கரில் வாழைக்கும், கரூர் தாலுகா, புஞ்சைப்புகளூரில், ஒரு ஏக்கரில் வெற்றிலைக்கு பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாது, தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சம்பட்டியில் உணவுப்பூங்கா அமைக்கவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென்று, 10 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE