குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், வீ.மேட்டூர், உப்புகுளம், சின்னாயக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் மாடுகள், எருமைகள், ஆடுகள் ஆகிய கால்நடைகளுக்கு கழுத்து, வயிறு, கால்கள் ஆகிய பகுதியில் கட்டிகள் வந்துள்ளன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் கூறியதாவது: இது பெரியம்மையாகும். ஈ, கொசு போன்ற கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய். வெற்றிலை, 10 எண்ணிக்கை, மிளகு, 10 கிராம், கல் உப்பு, 10 கிராம், வெல்லம் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அரைத்து, நாக்கினில், தடவி கொடுக்க வேண்டும், ஒரு நாளைக்கு மூன்று முறை தர வேண்டும். குப்பைமேனி, வேப்பிலை, துளசி, மருதாணி, மஞ்சள் தூள், 20 கிராம், பூண்டு 10 பல், வேப்பெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய், 500 மி.லி.,ஆகியவற்றை கொதிக்கவிட்டு, பின்னர் ஆற வைத்து காயங்களை சுத்தப்படுத்திய பின் மேலே தடவ வேண்டும். கால்நடை மருத்துவமனையில் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அம்மையால் கால்நடைகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கால்நடைகள் இருக்கும் இடம் சுத்தமாக இல்லாமல் இருந்தால் இது போன்ற அம்மை நோய் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE