பாட்னா: பீஹாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 68% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது முந்தைய சட்டமன்றத்துடன் ஒப்பிடும்போது 10% அதிகமாகும்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு பீஹாரில் வெற்றி பெற்ற 243 எம்.எல்.ஏக்களில் 241 பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள், கோடீஸ்வர வேட்பாளர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி வெற்றி பெற்ற 241 வேட்பாளர்களில் 163 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதில் கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் 123 எம்.எல்.ஏக்கள் மீது உள்ளன. 2015-ம் ஆண்டில் வென்ற வேட்பாளர்களில் 40% பேர் மீது இத்தகைய கடுமையான குற்ற வழக்குகள் இருந்தன. இம்முறை அது 51% ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் மீது கொலை, 31 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 8 பேரும் எதிர்கொள்கின்றனர்.

கட்சி வாரியாக பார்க்கும் போது பா.ஜ.க., முதலிடத்தில் உள்ளது. 73 எம்.எல்.ஏ.,க்களில் 47 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அடுத்த இடத்தில் தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி கட்சி உள்ளது. அவரது 74 வேட்பாளர்களில் 44 பேர் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ., மற்றும் ஆர்.ஜே.டி.,யின் தலா ஒரு எம்.எல்.ஏக்களின் பிரமாண பத்திர விவரங்கள் தெளிவாக இல்லாததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 43 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்களில் 20 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். காங்கிரசின் 19 எம்.எல்.ஏக்களில், 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் 12 எம்.எல்.ஏக்களில் எட்டு பேரும், ஒவைசி கட்சியின் எம்.எல்.ஏக்கள் 5 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை போல் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 243 எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் (67%) கோடீஸ்வரர்கள். இந்த முறை 194 (81%) பேராக அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பணக்கார எம்.எல்.ஏக்கள் பட்டியலிலும் பாஜக முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏக்களில் 89% ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். இரண்டாம் இடத்தில் ஜே.டி.யூ (88%), மூன்றாம் இடத்தில் ஆர்.ஜே.டி (87%), நான்காம் இடத்தில் காங்கிரஸ் (74%) உள்ளது. 2015 ல் ஒரு எம்.எல்.ஏவின் சராசரி சொத்து ரூ.3.02 கோடியாக இருந்த நிலையில், அது 2020-ல் ரூ.4.32 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆர்.ஜே.டி மொகாமா தொகுதி எம்.எல்.ஏ., அனந்த் சிங் தான் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.68 கோடிக்கு மேல் உள்ளதாக கூறியுள்ளார். அதே போல் ஏழ்மையான வேட்பாளரும் ஆர்.ஜே.டி.,யைப் சேர்ந்தவர் தான். அலாலி தனி தொகுதியில் வென்ற ராம்விரிக் சதாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.70,000 ஆகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE