பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சென்னை அண்ணா பல்கலையில், புதிய பேராசிரியர்களை நியமிக்கும்போது, தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு, பல்கலை சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். பிற பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் நியமனங்களிலும், தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: அண்ணா பல்கலைக்கழக நியமனங்களில், தற்காலிக மற்றும் கவுரவ பேராசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது தான். அப்படியொரு நிலை காணப்படுவதை உணர்ந்து, முன்கூட்டியே சொல்லி வைப்போம் என, சொல்லி வைக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்: 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் மீது தேர்தல் வழக்கு இருக்கிறது' என, முதல்வர் தெரிவித்துள்ளார். அது, தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டியது. இவர் முதலில், தேர்தலில் நிற்கிறாரா என்று பார்ப்போம்.
'டவுட்' தனபாலு: வழக்குகள் இருந்தால் தான், பெரிய கட்சியாக வளர முடியும் என்பதை, தி.மு.க., தலைமை தவறாக புரிந்து கொண்டதோ என்ற, 'டவுட்' வருகிறது. சரி, முதல்வர் இ.பி.எஸ்., தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வரும் என்கிறாரா, அந்த அளவுக்கு பெரிய வழக்கு தொடரப் போகிறாரோ என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: 'பண்பற்ற நிகழ்ச்சிகள், ஆபாசத்துடன் கூடிய விளம்பரங்களை, 'டிவி'களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
'டவுட்' தனபாலு: எல்லா நீதிபதிகளும், இந்த அமர்வு நீதிபதிகள் போல, வித்தியாசமாக சிந்தித்து, வியத்தகு தீர்ப்புகளை வழங்குவதில்லை. அப்படி வழங்கினால், ஆபாச விளம்பரங்களும், அருவருக்கத்தக்க விற்பனை யுக்திகளும் மறைந்து விடும் என்பதில், 'டவுட்டே' இல்லை.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா: படங்கள் தயாரிப்பதே, அதை வெளியிடத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது, அதன் உறுப்பினர்களின் நலனுக்கே. வி.பி.எப்., கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடுவரதில்லை என்ற எங்கள் நிலைபாட்டில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். விரைவில், நல்ல தீர்வு எட்டப்படும்.
'டவுட்' தனபாலு: எந்தத் தீர்வு எட்டப்பட்டாலும், அதனால், தமிழக மக்களுக்கு துளி கூட பலன் கிடையாது; சினிமா தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தான் லாபம். எனவே, இனிமேலும், சினிமா துறை விவகாரங்களை, பொதுமக்கள் விவகாரம் போல பேசுவதை கைவிட வேண்டும். இந்த கருத்தை, பிற துறையினர் பல காலமாக வலியுறுத்தி வருகின்றனர்; அறிய மாட்டீர்களோ என்ற, 'டவுட்' வருதே!
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை, தமது அசாத்திய பந்துவீச்சால், திக்குமுக்காடச் செய்த, சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில், தொடர் வெற்றிகள் பெற, மனமார்ந்த வாழ்த்துகள்.
'டவுட்' தனபாலு: 'தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்' என்பரே அதுபோல, உங்கள் சொந்த ஊர் வீரர் என்பதால், ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள வீரர் நடராஜனை பாராட்டுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், சிறப்பான வகையில், நடராஜன் விளையாடுவது, 'டவுட்டே' இல்லாமல், மாநிலத்திற்கு பெருமை தான்!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில், சென்னை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க., பாணியை, தி.மு.க.,வும் கடைப்பிடிக்கிறது. ஏற்கனவே, சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, சென்னை கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய, நான்கு மாவட்டங்களையும் பிரிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
'டவுட்' தனபாலு: தமிழகத்தை நீண்ட காலமாக பங்கு போட்டு ஆட்சி செய்யும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள், எலியும், பூனையுமாக இருந்தாலும், நிர்வாகம், கட்சி அமைப்பு போன்றவற்றில் பல வித ஒற்றுமைகளை காண முடியும். இதைத் தான், அப்போதே, காமராஜர், 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்றாரோ என்ற, 'டவுட்' உறுதிபடுகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE