சினிமா உலகில் வித்தியாசமாக சிந்திப்பவர் என கேட்டால் எல்லோருமே நடிகர், இயக்குனர் பார்த்திபனை கை காட்டி விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு படத்தையும் மாறுபட்ட கோணத்தில் தந்து கொண்டுள்ளார். கடந்தாண்டு அவர் எழுதி, இயக்கி, தனிவொருவனாக நடித்த 'ஒத்தசெருப்பு' பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று தந்தது. சமீபத்தில் மத்திய அரசின் பனோரமா விருதுக்கு ஒத்தசெருப்பு தேர்வானது. தனி ஒருவர் நடிப்பில் வெளியான படத்திற்காக ஆசியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் விருதுகளை பெற்றது.
சோலோஆக்டிங் பட வரிசையில் உலகின்13வது படமாகவும், தென்னிந்திய சினிமாவின் முதல் படமாகவும் பெருமை பெற்றது. அந்த படம் தந்த உற்சாகத்தில் ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் பட வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படம் தமிழ் சினிமாத்துறையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தீபாவளி ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
ஒத்தசெருப்புக்கு தியேட்டர்களில் அங்கீகாரம் கிடைக்காத வருத்தம் உள்ளதா?
நிறைய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய விருதும் நிச்சயம் பெறும்.
தீபாவளி ரிலீஸ்?
இந்த வருஷத்துல வரும், அடுத்த வருஷத்துல வரும் தீபாவளி, பொங்கல் என எல்லா பண்டிகையும் சேர்ந்து ஒரே நாளில் எனக்கு வரப்போகிறது. அதுதான் என் அடுத்த 'சிங்கிள்ஷாட்' படமான 'இரவின் நிழல்' வெளியாகும் நாள்.
அந்த படம் எப்போது ரிலீஸ்?
அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.
பொன்னியின் செல்வனிலும் நடிக்கிறீர்களாமே?
இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். புஷ்பாகாயத்ரியின் வெப்சீரியலில் நடிக்கிறேன். விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறேன்.
விஜய்சேதுபதி 800 படம் சர்ச்சை குறித்து?
நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அவரே நன்றி வணக்கம் என சொல்லி விட்டார். நான் வேண்டுமானால் ந, வ என என் பாணியில் சொல்லவா?.
மேஷ்பா