இந்தியாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத சிறப்பு இவருக்கு கிடைத்தது. சில நடிகைகள் சினிமாத்துறையில் உச்சத்தை தொட்டு அரசியலில் இறங்கி எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய, மாநில அமைச்சர்கள், முதல்வராகியும் கூட அவர்களுக்கு கிடைக்காத சிறப்பு இவருக்கு கிடைத்தது. மனதுக்கு பிடித்திருந்தால் போதும், அவர்களை தலையில் துாக்கி வைத்து கொண்டாடும் தமிழகம் இவருக்கு கோயில் கட்டி கும்பிட்டது. இப்ப தெரியுதா நாம் யாரை சொல்ல வருகிறோம் என்று.
ஆம்... தமிழகத்தில் கோயில் கட்டி கும்பிடப்பட்ட நடிகை குஷ்பு.
பெயரிலேயே 'பூ' இருப்பதாலோ என்னவோ சினிமாவையடுத்து அரசியல் களத்திலும் இறங்கி மணம் வீசி வருகிறார். தி.மு.க., காங்., கட்சிகளில் தமிழகத்தை ஒரு ரவுன்ட் வந்து தற்போது பிரதமர் மோடியின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்து பாரதம் முழுக்க சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறார். தன் சுற்றுப்பயணத்திற்கு மத்தியில் கிடைத்த இடைவேளையின் போது தினமலர் தீபாவளி மலருக்காக அவர் பேசினார்.
பா.ஜ.,வில் இணைந்துள்ளீர்கள். எப்படி உணருகிறீர்கள்
பா.ஜ., செயல்பாடுகளை கண்டு நல்லது செய்யுறதுக்கு ஒரு கட்சி இருப்பதாக தோன்றியது. எனவே இதில் இணைந்தது சரியான பாதைக்கு வந்ததாக தோன்றுகிறது.
சரியான பாதை என எப்படி கூறுகிறீர்கள்
எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக எதிர்கட்சியில் உட்கார்ந்திருந்தோமே தவிர தீர்வை சொல்லமாட்டேங்கிறோம். காங்., அப்படி தான் இருந்தது. பிரதமர் மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதில் எல்லாவற்றிலும் குறைகள் கண்டுபிடிக்கிறதுக்கு மட்டுமே அந்த கட்சியில் இருப்பதாக தோன்றியது. எந்த அரசாக இருந்தாலும் நுாறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பது இருக்காது. நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். பாராட்டாமல் குறைகளை பெரிதாக பேச மட்டும் காங்.,கில் இருந்தோம். ஆனால் பா.ஜ.,வில் அந்த நிலை கிடையாது.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே
அதுகுறித்து மாநில தலைவர் முருகன் பார்த்து கொள்வார்.
பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பரப்பப்படுகிறது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்
நான் என்னை முஸ்லிம் ஆகவோ, ஹிந்து ஆகவோ பார்த்தது இல்லை. ஒரு இந்தியராக தான் பார்க்கிறேன். அப்படி எல்லோரும் பார்த்து கொண்டால் எந்த பிரச்னையும் வராது. சலுகை தேவைப்படும் போது ஹிந்து, முஸ்லிம் என பிரிக்கிறீர்கள். எஸ்.சி., பி.சி., என பிரிக்கிறீர்கள். மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை. முஸ்லீம்களுக்கு எதிராக பா.ஜ., இருப்பதாக கூறுபவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக இருக்கிறார்களா. எல்லோரும் ஹிந்து மதத்தை சார்ந்து தானே முக்கால்வாசி உள்ளார்கள். உங்களுக்கு ஹிந்து ஓட்டுக்களே வேண்டாம் என நினைக்கிறீர்களா. பொய்யான வேஷம் ஏன் போட வேண்டும். முஸ்லிம்களுக்கு பா.ஜ., எதிரானது என்றால் உ.பி.,யில் பிரதமர் மோடி கடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார் அல்லவா. மக்கள் ஓட்டளிக்கும் போது ஒரு விஷயம் மட்டுமே பார்ப்பர். யார் நல்லது செய்வர் என யோசித்து ஓட்டளிப்பர்.
மத சார்பின்மை என காட்டி கொள்வோர் குறிப்பிட்ட மத பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து சொல்கிறார்களே
நான் தி.மு.க., மட்டுமின்றி எல்லா கட்சிகளுக்குமே ஒன்றை சொல்லி கொள்கிறேன். தேர்தல் வந்தால் மட்டும் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் போறாங்க. அபிேஷகம் நடத்துறாங்க. எல்லாமே நடக்குதுல்ல. ஓட்டு வங்கி மனதில் வைத்து தான் செயல்படுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேலை செய்வதில்லை.
அரசியலில் புதிய பாதையில் புறப்பட்டுள்ள நீங்கள் தீபாவளிக்கு மக்களுக்கு சொல்ல விரும்புவது
தீபாவளியை மதம் சார்ந்த பண்டிகை ஆக்கி விடக்கூடாது. இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டும். தீபாவளியை 'பெஸ்டிவில் ஆப் லைட்' என சொல்கிறோம். எல்லோர் வாழ்க்கையில் எல்லா குடும்பத்திலும் வெளிச்சம் இருக்கட்டும்.
பிரதமர் மோடி குறித்து
அவரை பொறுத்து, யார் என்ன கூறினாலும் நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதை நோக்கி போய் கொண்டுள்ளார். அவருக்கு தெரியும் தேவையில்லாத விஷயங்களுக்கு பேசி கொண்டிருப்பர் என்று. அவருக்கு என தனி வழி இருக்கிறது.
உங்கள் தீபாவளி கொண்டாட்டம் எப்படி
வழக்கமாக தீபாவளிக்கு சொந்தங்கள் சென்னை வந்து விடுவர். அல்லது நாங்கள் கோவைபுதுார் சென்று விடுவோம். சுந்தர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம். எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை காட்டிடும் வகையில் பெண்கள் ஒரே சேலை அணிவோம்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா
கடவுள் நம்பிக்கையை விட மனிதரை மதிக்கும் மனப்பான்மை உண்டு. கடவுள் நம்பிக்கை கொண்ட நான், கும்பகோணத்தில் நுாறு குழந்தைகள் இறந்ததற்கு பின் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனேன். திருப்பதியில் அதிகாலை எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து அங்கபிரதட்சணம் செய்தவள் நான். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை நான் மதிக்கிறேன். என் வீட்டிலேயே கணவர் உள்ளிட்ட அனைவரும் கடவுளை நம்புபவர்கள்.
மேஷ்பா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE