பீஹார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தி.மு.க.,வுக்கு தேர்தல் பயத்தை ஏற்படுத்திஉள்ளது. வெறும், 0.03 ஓட்டு வித்தியாசத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியால், ஆட்சி அமைக்கமுடியாமல் போனதால், அதே நிலை இங்கேயும் வந்து விடக் கூடாது என, தி.மு.க., அஞ்சுகிறது.
அதனால், தன் கட்சி மாவட்டச் செயலர்களிடம் திடீர் ஆலோசனை நடத்தி, ஜாக்கிரதையாகயும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்படும்படி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மா.செ.,க்களில் பெரும்பாலானோர், காங்கிரசைக் கூட்டணியிலிருந்து, 'கழற்றி' விடுமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
0.03 சதவீதம் மட்டும்தான்
சமீபத்தில் நடந்து முடிந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இணைந்த, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணிக்கு, 1 கோடியே, 57 லட்சத்து, 1,226 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.இக்கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட, ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு, 1 கோடியே, 56 லட்சத்து, 88 ஆயிரத்து, 458 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு, 0.03 சதவீதம் ஓட்டுக்கள் தான் வித்தியாசம். அதாவது, 12 ஆயிரம் ஓட்டுக்கள் தான் குறைவு.
பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, தமிழக சட்டசபை தேர்தலில் பாதிப்பை உருவாக்கி விடுமோ என்ற பயம், தி.மு.க., மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. பீஹார் மாநில தேர்தல் முடிவு, அதன் சாதக, பாதகங்கள் குறித்து, ஸ்டாலினிடம், அக்கட்சியின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விவரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்களிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசினார். அதில், ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவும் பங்கேற்றார். அக்கூட்டத்தில் மாவட்டச் செயலர்களுக்கு, ஸ்டாலின், சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
13 பேர் குழு
இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:பீஹார் தேர்தலில், ஆர்.ஜே.டி., - காங்., கூட்டணியை போல, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது. எனவே, வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியானதும், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தலைமையிலான, 13 பேர் குழுவினர், காலை, மாலை என, இரு வேளைகளிலும், கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த வேண்டும். வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் தொடர்பான விண்ணப்ப படிவத்தை வழங்கி, அவர்களுக்கு உதவி செய்து, விண்ணப்பிக்க வைக்க வேண்டும். நுாறு, இருநுாறு என, குறைந்த எண்ணிக்கை ஓட்டுக்கள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், தேர்தல் பணி செய்யக் கூடாது; ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில், முன்னிலை பெறும் வகையில், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.மா.செ.,க்கள் நெருக்கடிஅஜாக்கிரதையாக இருந்து, கோட்டை விட்டால், தி.மு.க.,வால் கோட்டையை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே, கள பணிகளில் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என,மாவட்ட செயலர்களுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.
மேலும் மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், லாலு கட்சியின் தோல்விக்கு, காங்கிரசை நம்பியதே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லி, தமிழகத்திலும் காங்கிரசை நம்பி மோசம் போகக் கூடாது என்றும், அக்கட்சியைக் கூட்டணியிலிருந்து, 'கழற்றி' விட வேண்டும் என்றும், ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கி உள்ளனர்.
விவரம் அனைத்தையும் தமிழக காங்கிரஸ் உற்று நோக்கி வருகிறது. காங்கிரசின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும்... நாளை நம் இதழில்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE