வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக, குடியரசு என இரண்டு கட்சி தான் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. இவை தவிர, சில சிறிய கட்சிகளும்தேர்தலில் போட்டியிடுகின்றன.

இம்முறை கணிசமான ஓட்டுகள் பெற்ற சுதந்திரவாதக் கட்சி பல இடங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானித்தது. இழுபறியான இடங்களில் ஓட்டுகளை பிரித்ததால், ஜோ பைடன் வெற்றிக்கும் ஒருவிதத்தில் உதவியது.2020 அதிபர் தேர்தலில் ஜோ பிடன், டொனால்டு டிரம்ப் தவிர சுதந்திரா , கிரீன் , சோசலிசம் மற்றும் சுதந்திரா, அமெரிக்கன் சாலிடாரிட்டி சோசியல் வொர்க்ர்ஸ், யூனிட்டி, பிராஹிபிசன், அப்ரூவல் ஓட்டிங் போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. இதில் சுதந்திரா கட்சி மட்டுமே 538 எலக்ட்ரல் இடங்களிலும் போட்டியிட்டது. அடுத்து கிரீன் கட்சி 381 எலக்ட்ரல் இடங்களில் போட்டியிட்டன. மற்றவை சில இடங்களில் மட்டுமே போட்டியிட்டன.
அதிபர் தேர்தல் முடிவில் மூன்றாவது இடத்தை சுதந்திரா கட்சி பெற்றது. இது 1971ல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய கட்சியும் இதுதான். செனட்டில் இக்கட்சிக்கு உறுப்பினர்கள் இல்லை. ஆனால் பிரதிநிதிகள் சபையில் ஒரு உறுப்பினர் இருக்கிறார். இதன் சார்பில் இத்தேர்தலில் அதிபர் பதவிக்கு ஜோ ஜோர்சென்சன், துணை அதிபர் பதவிக்கு ஸ்பைக் கோஹன் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் ஜோர்சென்சன் இதுவரை 17,97,202 ஓட்டுகள் பெற்றுள்ளார். ஓட்டு சதவீதம் 1.2 சதவீதம். ஒரு எலக்ட்ரல் இடத்தை கூட பெறவில்லை.
இருப்பினும் மீடியா வெளிச்சத்தில் இல்லாத இவர், சில மாகாணங்களில் ஜோ பைடன் - டிரம்ப் இடையேயான வித்தியாசத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளார். உதாரணமாக அரிஜோனா மாகாணத்தில் (11 எலக்ட்ரல் இடங்கள்) பிடன் 16,68,684 (49.4%), டிரம்ப் 16,57,250 (49.1%) ஓட்டுகள் பெற்றனர். வித்தியாசம் 11,434 ஓட்டுகள் (0.3%). இங்கு இவர் 51,270 (1.5%) ஓட்டுகளை பெற்றார். இதே போல பென்சில்வேனியா (20 இடங்கள்) , விஸ்கான்சின் (10 இடங்கள்) மாகாணங்களிலும் வெற்றி வித்தியாசத்தை விட இரு மடங்கு ஓட்டுகளை பெற்றுள்ளார்.

ஜோர்சென்சன் இலினாய்ஸ் மாகாணத்தில் லிபர்டிவைல் நகரில் 1957 மே 1ல் பிறந்தார். இளநிலை உளவியல், எம்.பி.ஏ., முடித்த இவர், ஐ.பி.எம்., நிறுவனத்தில் சிலகாலம் பணியாற்றினார். பின் பி.எச்டி., முடித்து, 2006 முதல் கிளெம்சன் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். 2020 மே 23ல் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரானார். இத்தேர்தலில் அதிபருக்கு போட்டியிட்ட ஒரே பெண் இவர்தான். பல பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். இதற்கு முன் 1996 தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE