வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல இயக்குனர் என்பதையும் தாண்டி, நல்ல மனிதர் என்ற இடத்தை சினிமாத்துறையில் தக்க வைத்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.
அவரிடம் பேசியது:நான் பிறந்தது மதுரை உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி. அப்பா, அம்மா எனது சிறுவயதிலேயே தவறிவிட்டனர். உடன்பிறந்தோர் இரு அக்கா மற்றும் தம்பி. படிச்சது தேனி அல்லிநகரத்தில்.படிப்பு முடிந்தவுடன் தனியார் மில்லில் வேலைப்பார்த்தேன். வீட்டுக்கு அருகே தியேட்டர் என்பதால் தினமும் படம் பார்ப்பது வழக்கம். சினிமா இயக்குனராக வேண்டும் என கூறியபோது, அக்காக்கள் இருவரும் உனது வாழ்க்கையை நீதான் முடிவு பண்ணனும் என்றனர். அப்படியே சென்னைக்கு கிளம்பிட்டேன்.மணிரத்னம், பாரதிராஜா படங்களை பார்த்து தான் சினிமா இயக்குனராகும் ஆசை அதிகரித்தது. எனது மானசீக குரு இவர்கள் தான். நிஜத்தில் குரு எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் 2001 முதல் 2006 வரை உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.
நானும், இயக்குனர் ராஜேஷூம் நண்பர்கள் ஆனதும் அங்கு தான்.நண்பர் ராஜேஷ் இயக்கிய முதல் படம் 'சிவா மனசுல சக்தி' வெளியான நாள். அதே நாள் அவருடைய மனைவிக்கு பிரசவம். ஒருபக்கம் படத்தின் ரிசல்ட், மறுபக்கம் மருத்துவமனையில் விடிய, விடிய துாங்காமல் இருந்தோம். மறுநாள் காலை குழந்தை பிறந்தது. கடைக்கு டீ குடிக்க இருவரும் வந்தோம். அங்கே இருவர் பேசிக்கொண்டது, நாங்க ஜெயிச்சிட்டோம்னு கொண்டாடினோம்.
அவர்கள் பேசியது, 'மச்சான் எஸ்.எம்.எஸ். படம் நேத்து பார்த்தேன், வில்லனே கிடையாது; செமையா எடுத்து இருக்காங்கடா'... இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாது, என் நண்பன் ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரி தான். அவரிடம் ஒர்க் பண்ணும் போது அவர் 'உங்களுக்கு காமெடி ஸ்கிரிப்ட் நல்லா வருது' இதுலேயே டிரை பண்ணலாமே என்றார்.
அதில் உருவானது தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். தயாரிப்பாளர்களும் முதல் படம் போன்றே வேண்டும் என கேட்பதால், தற்போது வரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் ஆக் ஷன் படங்களிலும் கால் பதிக்கவேண்டும்.முதல் படத்திலேயே வித்தியாசமாக டைட்டில் வைத்ததால், இப்போது டைட்டிலே எங்களுக்கு டார்க்கெட் ஆயிடுச்சி. அதற்காக தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எம்ஜிஆர் மகன் வரை யோசித்து வைத்துள்ளோம். அடுத்து விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்திற்கும் யோசித்து கொண்டு இருக்கிறோம்.
'ரஜினிமுருகன்'படத்தின் சூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொரு சீன் சொல்லிக்கொடுக்கும் போது, கேமராமேன் நீங்களே நடிக்கலாம் என்பார். எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கு.நிறைய படங்கள் பண்ணணும். அவார்டு படங்கள் மட்டும் பண்ணணும் என்று நினைக்கமாட்டேன். அவார்டும் வாங்கணும்; படமும் நன்றாக ஓடணும் என்றார்.இவரை வாழ்த்த ponram03@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE