ஸ்டாக்ஹோம்: 'ஆர்த்ரிடிஸ்' எனப்படும், முழங்கால் வீக்கத்துக்கு வழங்கப்படும் மருந்தை அளிப்பதன் வாயிலாக, கொரோனா நோயாளிகள் பலியாவதை, 71 சதவீதம் குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசால் உலகெங்கும் இதுவரை, 5.39 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில், 13 லட்சம் பேர் உயிரிழந்துஉள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது பரவல் தீவிரமாக உள்ளது.இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை, மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப் nபடவில்லை. அதனால், எவ்வாறு இதன் பாதிப்பை தடுப்பது என்பது குறித்து, பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா மையம், சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தடுக்க முடியும்
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர், முதியோரே. முதியவர்களுக்கு வரும் முக்கியமான உடல் பிரச்னை, ஆர்த்ரிடிஸ் எனப்படும் முழங்கால் வீக்கமே. ஆர்த்ரிடிஸ் பாதிப்பு உள்ளோருக்கு வழங்கப்படும், 'பேரிக்டினிப்' என்ற மருந்து, நாளொன்றுக்கு ஒன்று வீதம் அளித்து வந்தால், கொரோனா வைரசால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த மருந்தின் மூலம், உயிரிழப்பு ஏற்படுவதை, 71 சதவீதம் வரை தடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய மருந்து
கொரோனாவை குணப்படுத்துவதற்கு, எந்த நாடும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், 'ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக, ரஷ்ய அரசு, கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. ஆனால், இந்த மருந்தின் நம்பகத் தன்மை குறித்தும், அந்த மருந்தின் பரிசோதனை முயற்சிகள் முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்கவில்லை என்றும், பல்வேறு நாடுகள் சந்தேகம் தெரிவித்திருந்தன.
'ஸ்புட்னிக் வி' மருந்து, 92 சதவீதம் பயன் அளிக்கும் என, ரஷ்யா, சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முறையாக நடந்ததாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த மருந்து, நம் நாட்டுக்கும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுஉள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லுாரியில், இந்த மருந்துக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கவுள்ளதாக, அந்த கல்லுாரியின் முதல்வர் கமல் தெரிவித்து உள்ளார். அடுத்த வாரம், இந்த மருந்து கான்பூருக்கு வந்து விடும் என்றும், அதன் பின், தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தைச் செலுத்தி, பரிசோதனை முயற்சிகள் துவங்கும் என்றும், அவர் கூறினார்.
250 பேர் பதிவு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முயற்சியில், 'பாரத் பயோடெக்' நிறுவனம், தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, மூன்றாம் கட்டப் பரிசோதனை நடந்து வருகிறது.அலிகர் முஸ்லிம் பல்கலையின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லுாரி, 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை, 250 பேர் இந்த பரிசோதனைக்காக தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளனர்
.'பல்கலையின் துணை வேந்தர் தாரிக் மன்சூர், இந்தப் பரிசோதனைக்கு முன்வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அவர் வேறு ஒரு தடுப்பூசி எடுத்துள்ளார். அதனால், அவர் இந்தப் பரிசோதனையில் ஈடுபட முடியாது' என, மூத்த விஞ்ஞானி, முகமது ஷமீம் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE