சென்னை:கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் பல மடங்கு குறைந்து விட்ட நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது மட்டும் தள்ளி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான கல்வி ஆண்டில் பின்பற்றப்படும் அட்டவணைப்படி, பாடங்களை நடத்த முடியவில்லை. கல்வி ஆண்டு கணக்கில், ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், திட்டமிட்டபடி பாடங்களையும், தேர்வுகளையும் முடிக்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, கல்வி ஆண்டை கூடுதலாக, மூன்று மாதங்கள் நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதாவது, ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கு பதில், ஜூலை வரை கல்வி ஆண்டை நீடிக்கலாம் என, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.அதேநேரம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையையும் கருத்தில் வைத்து, மத்திய கல்வி அமைச்சகத்திடம் விளக்கம் பெற்ற பின், கல்வி ஆண்டு நீட்டிப்பு குறித்த முடிவு வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE