பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் திருடும் கும்பலை சேர்ந்த ஒருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கேதில் பகுதியை சேர்ந்தவர் ரெஜிஷ், 37. அதே பகுதியை சேர்ந்தவர் அவரது நண்பர் நிஷாந், 35. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இருவரையும், கேரள மாநிலம், பூதங்கோடு பகுதியில் வசிக்கும் சபரி, 28, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம், அங்காளம்மன்புரம் பகுதியில் நிலம் பார்க்க அழைத்து வந்தார்.சம்பவ இடத்தில் ரெஜிஷ் மற்றும் அவரது நண்பர் நிஷாந் இருவரையும் சபரி மிரட்டியுள்ளார். 'அங்காளம்மன்புரத்தை சுற்றியும் தன் ஆட்கள் நிறையபேர் இருக்கின்றனர். சொன்னால் உங்கள் இருவரையும் கொன்று விடுவர்' என்று மிரட்டியுள்ளார். பயந்து போன ரெஜிஷ், நிஷாந் இருவரும் தங்களுடைய காரை, அதே இடத்தில் விட்டு விட்டு ஓடி வந்து விட்டனர்.நேற்று மாலை சென்று பார்த்தபோது, கார் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, காரை திருடி சென்ற சபரி, 28, கைது செய்து, அவரிடம் இருந்து, திருடி செல்லப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், சபரியும், நண்பர்களும், வியாபாரம் பேசுவது போல் பேசி ஆட்களை வரவழைப்பதும், அவர்களை மிரட்டி கார்களை திருடி செல்வதும் வாடிக்கை என, தெரியவந்தது. 'சபரியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டால், மேலும் பல கார்கள் மீட்கப்படலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE