மேட்டுப்பாளையம்:கோவை சந்தைக்கு, மைசூர் தக்காளி அதிகப்படியாக கொண்டு வரப்படுவதால், காரமடை வட்டாரத்தில் பயிராகியுள்ள நாட்டுத் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.காரமடை வட்டாரத்தில், மருதூர், காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நாட்டுத்தக்காளி பயிர் செய்துள்ளனர். இதன் அறுவடை காலத்தில், மைசூரிலிருந்து, தக்காளி கோவை சந்தைக்கு அதிகப்படியாக வருவதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மருதூரை சேர்ந்த பெண் விவசாயி புஷ்பா கூறியதாவது:காரமடை பகுதியில் பல ஆண்டுகளாக, நாட்டு தக்காளியை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த செடிகள் நிலப்பகுதியில் படர்ந்து காய் விடுகின்றன. ஒரு ஏக்கருக்கு, 8 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்கின்றனர். 90 நாட்களில், தக்காளி அறுவடைக்கு தயார் நிலை வந்து விடும். களை எடுத்து நன்கு பராமரித்தால், வாரம் இரண்டு முறை வீதம், மூன்று மாதங்களுக்கு, தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதனால், 6 டன் வரை தக்காளி மகசூல் கிடைக்கும்.நாற்று நடவு நட்டதிலிருந்து, பழங்கள் அறுவடை செய்யும் வரை, ஏற்படும் செலவு தொகையை கணக்கிட்டால், ஒரு கிலோ தக்காளி தோட்டத்திலேயே, 20 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அதற்கு குறைவாக விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும்.மழை காலத்தில், செடிகளில் தரையில் உள்ள தக்காளி பழங்கள், விரைவில் அழுகி விடுகின்றன. மேலும் அறுவடை செய்த மூன்று நாட்களில், பழங்களை சமையலுக்கு பயன்படுத்தவில்லை என்றால், அழுகும் நிலை ஏற்படும்.தற்போது மைசூரிலிருந்து அதிகளவில் தக்காளி வருவதால், காரமடை நாட்டுத் தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தற்போது தோட்டத்திலேயே ஒரு கிலோ தக்காளி, 4 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். ஆனால், கடைகளில் ஒரு கிலோ தக்காளி, 18லிருந்து, 20 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.மைசூர் தக்காளி, நான்கைந்து நாட்களுக்கு மேல் வைத்தாலும், அழுகல் ஏற்படுவதில்லை. அதனால் பொதுமக்கள் நாட்டுத் தக்காளியை விட, மைசூர் தக்காளியை விரும்பி வாங்குகின்றனர். விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் விவசாயிகள் தக்காளி செடிகளை, தரையில் படர்வதை தவிர்த்து, கம்பி கட்டி உயரமாக வளர வைத்தால், பழங்கள் தரையில் படாமல் இருக்கும். இதனால் நாட்டுத் தக்காளி, ஓரளவு கெட்டி தன்மையாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு விவசாயி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE