சிறப்பு பகுதிகள்

உரத்த குரல்

கட்டுச் சோற்றில் பெருச்சாளி காங்கிரசை தி.மு.க., கழற்றி விடுமா?

Updated : நவ 17, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (42)
Advertisement
பீஹார் தேர்தல் முடிவால் பீதி அடைந்துள்ள அறிவாலயத்துக்கு, காங்கிரசுடன் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. தி.மு.க.,வுக்கு தொற்று பாதிக்காமல் இருக்க, அது ஒன்று தான் வழி.'கூட்டணி கட்சியுடன் உள்ள உறவை கொச்சைப்படுத்துவதா' என்று, தமிழக காங்., தலைவர் அழகிரி ஆத்திரம் கொள்ளக்கூடும். உண்மையில் காங்கிரசுடன் சமூக இடைவெளி அவசியமாகி விட்டது என்ற, குரல்
காங்கிரஸ், காங், திமுக, தி.மு.க.,  பீஹார்தேர்தல்,

பீஹார் தேர்தல் முடிவால் பீதி அடைந்துள்ள அறிவாலயத்துக்கு, காங்கிரசுடன் சமூக

இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. தி.மு.க.,வுக்கு தொற்று பாதிக்காமல் இருக்க, அது ஒன்று தான் வழி.

'கூட்டணி கட்சியுடன் உள்ள உறவை கொச்சைப்படுத்துவதா' என்று, தமிழக காங்., தலைவர் அழகிரி ஆத்திரம் கொள்ளக்கூடும். உண்மையில் காங்கிரசுடன் சமூக இடைவெளி அவசியமாகி விட்டது என்ற, குரல் கேட்டதே, அறிவாலயத்தில் தான் என்று சொன்னால், அவர் அமைதியாகி விடுவார்.அரசியல் சம்பிரதாயப்படி, இரண்டு தரப்பும் மறுக்கலாம். அதனால், உண்மை பொய்யாகி விடாது. பீஹார் தேர்தல் முடிவு வந்த நேரத்திலேயே, தி.மு.க.,வில் சலசலப்பு துவங்கி விட்டது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் அமைந்த, மகா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று, ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டன. ஓட்டுப் பதிவு முடிந்ததும் வெளியான, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும், அதை உறுதி செய்தன. அதை எல்லாம் தகர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.

அவர்கள் எப்படி வெற்றி பெற்றனர் என்பதை, யாரும் பேசவில்லை. மகா கூட்டணி எப்படி தோற்றது என்று தான் விவாதிக்கின்றனர். ஆளாளுக்கு சில கருத்துக்களை, காரணங்களை முன்வைக்கின்றனர்.எல்லாரும் சொன்னதில், பொதுவாக இருந்த கருத்து ஒன்றே ஒன்று.
மகா கூட்டணியின் தோல்விக்கு காங்., காரணம் என்பதே!இந்த பொது கருத்தை, பா.ஜ.,வோ, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ சொல்லவில்லை; காங்கிரஸ்காரர்களே சொல்கின்றனர்.

அந்த கட்சியில், கருத்து சுதந்திரம் உண்டு என்பது தெரியும் தானே!காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான தாரிக் அன்வர், 'காங்., கட்சியின் தோல்வி மட்டும் கவலை தரவில்லை. மகா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு, காங்., காரணமாக இருந்து விட்டதே என்பதில், எனக்கு அதிக வருத்தம்' என்கிறார்.இவர், ஐந்து முறை லோக்சபா, இரண்டு முறை ராஜ்யசபா என, 30 ஆண்டுகளுக்கு மேல், எம்.பி.,யாக இருந்தவர். மத்திய அமைச்சராகவும் பொறுப்பு
வகித்தவர். எனவே, 'விபரம் தெரியாமல் பேசி விட்டார்' என, காங்கிரஸ் மேலிடம் கைகழுவ முடியாது.

'செத்த பாம்பை எட்டு பேர் அடிப்பர்' என்று, பழமொழி உண்டு. அதுபோல, தோற்றுப் போன
காங்கிரசை விமர்சனம் செய்ய, வரிசையில் வரத் தான் செய்வர். என்றாலும், அது அந்த
கட்சியின் மீதான வெறுப்பில் விளைந்த விமர்சனம் கிடையாது.தேர்தலில் கிடைத்த அல்லது கிடைக்காமல் போன ஓட்டுகள், 'சீட்'களை வைத்து நடத்தும் ஆராய்ச்சியில் தெரிய வரும் உண்மை.

ஒரு கட்சி, எத்தனை ஓட்டுகள் வாங்கியது என்பதை வைத்து, அதன் பலத்தை, இப்போது யாரும் தீர்மானிப்பது இல்லை. கூட்டணி அரசியல் நிரந்தரமாகி விட்டதால், விழும் ஓட்டுகள், எந்த
கட்சிக்கு உரியது என்பதை, யாராலும் சொல்ல முடியாது.எனவே, போட்டியிட்ட இடங்களில், எத்தனை இடங்களை, ஒரு கட்சியால் கைப்பற்ற முடிந்தது என்பதை வைத்தே, அதன் பலத்தை மதிப்பீடு செய்கின்றனர்.எத்தனை பந்துகளில், எத்தனை ரன் எடுத்தார் என்பதை வைத்து,
அதாவது அவரது, 'ஸ்ட்ரைக் ரேட்' வைத்து, ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை முடிவு செய்கின்றனர்.

அந்த அடிப்படையில் பார்த்தால், பீஹார் தேர்தலில், காங்., 70 தொகுதிகளில் போட்டியிட்டு,
19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.ஸ்ட்ரைக் ரேட், 27 சதவீதம். ராஷ்ட்ரிய ஜனதா தளம், 144ல் நின்று, 75ல் வென்று, 52 சதவீதஸ்ட்ரைக் ரேட்டைஎட்டியுள்ளது.மகா கூட்டணியில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், 29க்கு, 16ல் வெற்றி பெற்று, 55 சதவீத ஸ்ட்ரைக் ரேட் பெற்று சாதித்துள்ளன.

இந்த கட்சிகள் அளவுக்கு, காங்., சாதித்து இருந்தால், குறைந்தது, 35 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும். மெஜாரிட்டி கிடைத்து, மகா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். இந்த புள்ளி
விபரத்தையே கொஞ்சம் மாற்றி சொன்னால், காங்கிரசுக்கு, 30 இடங்களை ஒதுக்கிவிட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியோ, கம்யூனிஸ்டுகளோ மீதி, 40ல் போட்டியிட்டு இருந்தால் கூடுதலாக, 20 தொகுதிகளை, மகா கூட்டணி பெற்றிருக்க கூடும்.

அதாவது, 30ல் பாதி இடங்களில், காங்கிரஸ் ஜெயிக்க முடிந்தால் கூட, மொத்த எண்ணிக்கை அதிகரித்து, ஆட்சி வசப்பட்டு இருக்கும்.இதைத் தான் தாரிக் அன்வர், குற்ற உணர்வுடன் மனம் விட்டு சொல்லி இருக்கிறார்.ஆறு ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ். அதுவே பெரிய வீழ்ச்சி. அன்று தொடங்கி, இன்று வரை, அதன் பலம் சுருங்கி
வருகிறது.

எல்லா மாநிலங்களிலும், அது ஏதாவது ஒரு பிராந்திய கட்சியின் கூட்டணியில் சேர்ந்து, அதன் உதவியால் சில இடங்களை ஜெயித்து, தன் இருப்பை காட்டி வருகிறது. ஆனால், பதிலுக்கு, அந்த கூட்டணிக்கு உதவ, அக்கட்சியால் இயலவில்லை.பீஹார் மட்டுமல்ல; உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா என, பல மாநிலங்களிலும் தனக்கு தோள் கொடுத்து துாக்கிச் சுமந்த, பிராந்திய கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்ப்பதே, காங்கிரசின் சேவையாகி விட்டது.

திட்டமிட்டு, வேண்டும் என்றே இவ்வாறு செய்வதாக, யாரும் குற்றம் சாட்டவில்லை. அதன் நிலைமை அப்படி ஆகிவிட்டது. ராசி இல்லாத கட்சி என்ற, பெயரை கஷ்டப்படாமல் சம்பாதித்து விட்டது.தி.மு.க.,வின் பீதிக்கு பின்னணி இது தான். தமிழகத்தில், ஏற்கனவே காங்கிரசுக்கு அஸ்திவாரமும் கட்டுமானமும் சிதிலமாகி கிடக்கிறது. 1967ல் ஆட்சியை பறிகொடுத்த அக்கட்சி, அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, 'ஓசி' பல்லக்கில் தான் ஊர்வலம் வருகிறது.

பல்லக்கு துாக்கிய திராவிட கட்சிகளுக்கு, அதனால் லாபம் கிடைத்தாலாவது பரவாயில்லை.
மத்திய ஆட்சி காங்கிரஸ் வசம் இருந்த கட்டங்களில், எம்.ஜி.ஆரும் கருணாநிதியும், இங்கே கொடுத்து, அங்கே வாங்க வழி கிடைத்தது. 2014க்கு பின்னர், அதுவும் மூடப்பட்டு விட்டது.
மே மாதம் வர இருக்கும் சட்டசபை தேர்தலில், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று, தி.மு.க., நம்புகிறது.

ஒரு நாள் கூட தவறாமல், ஸ்டாலின், அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார். பழனிசாமி அரசுக்கு நாள் குறித்தாகி விட்டது என, 'கவுன்ட் டவுன்' அறிவித்துள்ளார்.தனித்து நின்றாலே, தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி கிடைப்பது நிச்சயம் என்று, ஸ்டாலினின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்து தந்திருக்கிறார்.எனவே, பீஹார் தேர்தல் முடிவுகள், தி.மு.க., வயிற்றில் புளியை கரைப்பதில், வியப்பு எதுவும் இல்லை.

ஏற்கனவே, 2016ல் விட்ட கோட்டையை, இந்த முறையும் பிடிக்க முடியாமல் போனால்,
எதிர்காலம் இருண்ட காலமாகி விடும் என்பதை, அவர்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர்.கட்டுச் சோற்றில் பெருச்சாளியை சேர்த்து கட்டியதுபோல், காங்கிரசை கூட வைத்துக் கொண்டு, தேர்தலை சந்தித்தால், விபரீத மாகி விடுமோ என்ற அச்சம், தி.மு.க.,வின் சீனியர்களிடம்
தெரிகிறது.அப்படி நடந்தால், தீவிர அரசியலில் இருந்து, ஸ்டாலினை ஒதுக்கி விடும் என்ற பேச்சும், கட்சிக்குள் கிசுகிசுப்பாககேட்கிறது. ஆனால், காங்கிரசை 'கழற்றி' விட, ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என்பது, நமக்கு கிடைத்த தகவல்.

கருணாநிதி மீது சோனியா காட்டிய மரியாதைக்காகவும், தந்தையின் நினைவாகவும்,
காங்கிரசுக்கு, 10தொகுதிகள் ஒதுக்கி கவுரவிக்க, தி.மு.க., தலைவர் தீர்மானித்திருக்கிறார் என்கிறது, அந்தநம்பகமான தகவல்.தி.மு.க., தங்களை 'கழற்றி' விடப் போகிறது என்பதை காங்கிரஸ் சூசகமாக உணர்ந்து விட்டதால், மூன்றாம் அணியை, அதாவது, கமல் - கம்யூனிஸ்ட் - காங்., என கூட்டணி அமைக்கலாம் என, அழகிரி கணக்கு போடுகிறார்.

ஊறுகாய்க்கு தினகரனையும் சேர்க்கலாம் என்று தனக்கு மிக நெருக்கமானவர்களுடன் ஆலோசிக்கிறார்!
காங்கிரசின் அதகளங்கள்... விரைவில்!

-- துர்வாசர்

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X