குடியிருப்புகளுக்குள் குபீர் மேடாக நிற்கும், வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு இணையாக மற்றொரு காரணியாலும், எக்கச்சக்கமான விபத்துகள் நடக்கின்றன. அந்த காரணி மாநகராட்சியால் வளர்க்கப்படும் தெருநாய்கள்தான். ஒவ்வொரு வீதியிலும் மாநாடு நடத்தும் அளவுக்கு, தெருநாய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது.
வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த, ஒன்றரை வயது ஆண் குழந்தையை, தெருநாய்கள் சேர்ந்து கடித்துக் குதறி, பின்பு அந்த குழந்தையின் உயிர் பெரும் போராட்டத்துக்குப் பின், காப்பாற்றப்பட்டதை கோவை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.வாக்கிங் போக முடியலைகாலையில் வாக்கிங் செல்வோரைத் துரத்துவது, இரவெல்லாம் குரைத்தும், ஊளையிட்டும் குடியிருப்புவாசிகள் துாக்கத்தைக் கலைப்பது, குப்பையை கிளறி தெருக்களை நாறடிப்பது, தெருவில் குழந்தைகளை விளையாட, அனுப்ப முடியாத அளவுக்கு அச்சுறுத்துவது என, இந்த தெருநாய்களின் தொல்லை, எங்கெங்கு காணினும் மீறிக்கொண்டிருக்கிறது எல்லை.தி.மு.க., ஆட்சியின்போதும் இதேபோன்று, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது.
அப்போது தெருநாய்கள் பெருமளவில் பிடிக்கப்பட்டு, உக்கடம் மற்றும் சீரநாயக்கன்பாளையத்திலுள்ள, மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்பட்டன. 'ஹியூமன் அனிமல் சொசைட்டி', 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' ஆகிய அமைப்புகள், நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மீண்டும் வீதிகளில் விட்டு வந்தன.இதனால் நாளடைவில் தெருநாய்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. ஒவ்வொரு நாயையும் பிடித்து, அதை மையத்துக்குக் கொண்டு சென்று, அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது என்பது சாதாரண விஷயமில்லை என்பதால், அதற்கு பெரும் செலவும் ஏற்பட்டது. ஒவ்வொரு நாய்க்கும் கருத்தடை செய்யும் தொகையில், பாதித்தொகையை பிராணிகள் நல அமைப்புகள் ஏற்றுக் கொண்டிருந்தன.கருத்தடை நிறுத்தம்இப்படி ஒவ்வொரு நாய்க்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு, கோவை மாநகராட்சி சார்பில் 444 ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டுமென்று, நாய்கள் கருத்தடைப் பணியில் ஈடுபட்டிருந்த அமைப்புகள் மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்தன. பொள்ளாச்சி நகராட்சியில் ஒவ்வொரு நாய்க்கும் 700 ரூபாய் தருவதாகக் கூறி, அந்தத் தொகையைத் தருமாறு கேட்டுக்கொண்டன.ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. தொகையை அதிகரித்துத் தரவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கருத்தடை நிறுத்தப்பட்டது.
உக்கடம் கருத்தரிப்பு மையம், மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திரும்பிய திசையெல்லாம் தெருநாய்கள் கூட்டம் அச்சுறுத்துகிறது.இந்த நாய்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை, மாதந்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுபற்றிப் பேசுவதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளும் இல்லை.நடந்து சென்றால் தெரியும் சேதி! கார்களில் மட்டுமே தெருக்களைக் கடந்து செல்லும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் படும்பாடுகள் தெரிவதேயில்லை.
மக்கள் மன்றம் திரும்பவும் கூடும் வரை, கோவையில் தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வே இல்லை.கோவை மாநகராட்சியில் குடியிருப்புகளில், வணிகச் செயல்பாடுகள் அதிகரிப்பதில் வெவ்வேறு குடியிருப்புவாசிகளுக்கும், வெவ்வேறு விதமான வருத்தங்கள், புகார்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு குடியிருப்புப் பகுதியில் அதிகரிக்கும் வணிகச் செயல்பாடுகள், ஒட்டுமொத்த கோவை மாநகரையும் கவலையடையச் செய்து கொண்டிருக்கிறது.
அது எந்தப் பகுதி...நாளை! -நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE