கோவை:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்குள், அந்நியர் நடமாட்டத்தை கண்காணிக்க, கூடுதலாக, 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.கோவை, டவுன்ஹாலில், மாநகராட்சி பிரதான அலுவலகம் செயல்படுகிறது. கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் துறை தலைவர்களுக்கான அலுவலகங்கள் செயல்படுகின்றன.உயரதிகாரிகளை சந்திக்க, பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். 'அதிகாரிகளை எங்களுக்கு தெரியும்; சீக்கிரமாக வேலையை முடித்து தருகிறோம்' என கூறி, பொதுமக்களிடம் பேரம் பேசி, பணம் பறிக்கும் இடைத்தரகர்களும், அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். லஞ்சம் கொடுத்து, காரியம் சாதிக்க வருவோரும் இருக்கின்றனர்.இவர்களின் நடமாட்டத்தை தவிர்க்கும் வகையிலும், அந்நியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அலுவலக பொருட்கள் திருடு போகாமல் இருக்கவும், வளாகத்துக்குள் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்யும் வகையில், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இவை போதுமானதாக இல்லாததால், ரூ.8 லட்சத்தில், கூடுதலாக, 22 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கமிஷனர் அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில், மெகா சைஸில், 'டிவி' வைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகத்துக்குள் ஒருவர் நுழைந்தால், எங்கெங்கு செல்கிறார் என்பதை, கமிஷனர் அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில், இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி அலுவலர்கள் பீதி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE