கருத்துக் கணிப்பை நம்பாத லாலு!| Dinamalar

கருத்துக் கணிப்பை நம்பாத லாலு!

Updated : நவ 16, 2020 | Added : நவ 15, 2020
Share
பீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.ராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது... நம்ப
டில்லி உஷ்,india, politics, இந்தியா, அரசியல்

பீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.

ராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது... நம்ப முடியவில்லையே. யாதவ் மற்றும் சிறுபான்மையினர் மட்டுமே, நம் ஓட்டு வங்கி. 'மற்ற ஜாதி ஓட்டுகள் நமக்கு கிடைக்காது. அப்படியிருக்கும்போது, எப்படி இவ்வளவு சீட் நமக்கு கிடைக்கும்' என, கட்சி தலைவர்களிடம் கேட்டுள்ளார், லாலு.

'ஆளும் கட்சிக்கு ஆதரவான, 'ரிபப்ளிக் டிவி' யில் கூட, தேஜஸ்வி கூட்டணி தான், 160க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்கிறது'. இதைக் கேட்டு சிரித்த லாலு, 'அர்னாப் கோஸ்வாமி ஜெயிலுக்கு போனதால், அந்த சேனல், பா.ஜ.,வுக்கு எதிராகி விட்டதா' என, சிரித்துள்ளார்.

இதற்கிடையே கருத்துக் கணிப்பை கேட்டதும், காங்., தங்கள் சீனியர் தலைவர்களை பாட்னாவிற்கு அனுப்பியது. 'எங்கள், எம்.எல்.ஏ.,க்களை யாரும் விலைபேசாமல் இருப்பதற்காக, மூத்த தலைவர்கள் இங்கு வந்துள்ளனர்' என, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறினர்.

ஆனால் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பு ஒரு பொழுதுபோக்கு என்பதை மீண்டும் நிரூபித்தன. பீஹாரில், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனியாக போட்டியிட்டது. கருத்து கணிப்பில் பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் என அனைத்து சேனல்களும் கூறின.கடைசியில் அது பொய் ஆனது. நிதிஷ் குமார் அப்போது, லாலுவுடன் கூட்டணி யில் இருந்தார். அவர்தான் வென்றார். எனவே, 'இந்த கருத்துக் கணிப்பு வெறும் கருத்து திணிப்பு தான்' என, பா.ஜ., வினர் கிண்டலடிக்கின்றனர்.


ஸ்டாலினை எச்சரிக்கும் தலைவர்கள்பீஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு தோல்வி, தி.மு.க.,வின் மூத்த தலைவர்களை, பெரிதும் பாதித்துள்ளது. தேர்தல் திட்டத்தை தயாரிக்க, பிரசாந்த் கிஷோரிடம் பணியை ஒப்படைத்து, 300 கோடிக்கும் மேலாக பணமும் கொடுத்துள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.கிஷோரும், ஊரெல்லாம் தி.மு.க.,வுக்கு வாய்ப்பு எப்படியிருக்கிறது என கருத்து கேட்டு, தலைமைக்கு சொல்லி வருகிறார். அதற்கேற்றவாறு திட்டங்களையும் ஸ்டாலினுக்கு சொல்கிறார்.

கொரோனா சமயத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள், பீஹாரில் உள்ள கிராமங்களுக்கு செல்லவில்லை. போனிலேயே பேசி, வேலையை முடித்தனர். வீட்டிலிருந்த படியே, கருத்துக் கணிப்புகளை நடத்தியதால் தான், இப்படி ஆனாது என்கின்றனர், பா.ஜ., வினர்.

இதை ஏற்றுக்கொள்ளும், தி.மு.க., வினர், 'ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யாருக்கு என, பிரசாந்த் கிஷோர் நிறுவனம் கருத்து கேட்டு, அறிக்கை தயாரித்து வருகிறது. இவர்களும், பீஹார் பாணியைத் தான் பின்பற்றுவர். 'கிஷோரை நம்பி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், அதோ கதி தான். ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது' என்கின்றனர், கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்கள்.


ராகுல் எங்கே?பீஹார் தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, 19ல் மட்டுமே வெற்றி கிடைத்தது. மற்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் கேட்கவே வேண்டாம்.

தினமும் மூன்று வேளையும், எதோ மருத்து சாப்பிடுவது போல, மோடியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்த ராகுல், பீஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. உத்தர பிரதேசத்தில், ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை, பிரியங்காவும், ராகுலும் கையில் எடுத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் என தினமும், 'டிவி' யில் வந்தனர். ஆனால், உ.பி.,யில் நடந்த எட்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் எதிலுமே வெற்றி பெறவில்லை.

'சமூக வலைதளங்கள் வாயிலாகவே அரசியல் நடத்தி வெற்றி பெற்று விடலாம் என, ராகுலும், பிரியங்காவும் நினைக்கின்றனர். மக்களின் மனநிலை இவர்களுக்கு புரியவில்லை. இப்படியே போனால், உள்ளதையும் இழக்க வேண்டியதுதான்' என, புலம்புகின்றனர், மூத்த தலைவர்கள்.

லாலுவின் புதல்வர் தேஜஸ்வி, முதல்வராகும் வாய்ப்பு பறிபோனதற்கு, காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியது தான் காரணம், தன் பங்கிற்கு புலம்புகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விரும்புகிறது. 'பீஹார் போல அதிக தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்கினால், தேஜஸ்வி நிலைதான் ஸ்டாலினுக்கு ஏற்படும்' என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.


பீஹார் சட்டசபையில் தமிழ்பிரதமர் மோடி எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், தமிழ் மொழியைப் பாராட்டி பேசுகிறார். திருக்குறளின் பெருமையை சொல்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழிலேயே சில நிமிடங்கள் மோடி பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்நிலையில், பீஹார் சட்டசபைக்கு, பா.ஜ., விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள். இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தமிழகத்தில் பணியாற்றியுள்ளனர்.

கோவை, மதுரை உட்பட பல இடங்களில், ஆர்.எஸ்.எஸ்.,சில் சில ஆண்டுகள் பணியாற்றியதால், தமிழ் நன்றாக பேசுகின்றனர். 'இவர்கள் சட்டசபையில், தமிழில் பேசுவர். பிரதமரைப் போல திருக்குறளின் பெருமையை சட்டசபையில் எடுத்துச் சொல்வர்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள். 'தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எழுதி வைத்து பேசுகின்றனர். ஆனால், இந்த மூன்று பேரும், எழுதி வைத்துக் கொள்ளாமலேயே, தமிழில் பேசுவர்' என்கின்றார், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர்.


வேல் யாத்திரைவேல் யாத்திரை துவங்கியதுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஒவ்வொரு ஊரிலும் இந்த யாத்திரையை நடத்தி வருகிறார், கட்சி யின் மாநில தலைவர் முருகன். இந்த யாத்திரை குறித்த மூன்று நிமிட வீடியோவை டில்லி அனுப்பி வைத்துள்ளார், முருகன். பிரதமருக்கு நெருக்கமாக உள்ள ஒரு அதிகாரி, இந்த வீடியோவை பிரதமருக்கு காண்பித்து வருகிறாராம்.

முருகனின் இந்த வேல் யாத்திரை குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், முருகன் செயல்பட்டு வருகிறார். கட்சி தலைமைக்கும், பிரதமருக்கும், தன் யாத்திரை குறித்த தகவல்களை தருவதுடன், தமிழக அரசியல் நிலை குறித்தும், அவ்வப்போது தெரிவிக்கிறாராம்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, தமிழகத்திலிருந்து யார் சந்தித்து பேசினாலும், அவர்களிடம் முருகனைப் பாராட்டி பேசுகிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X