திருப்பூர்:திருப்பூரில், 200 டன் பட்டாசு குப்பைகள் குவிந்தன. இவற்றை அகற்ற, இரவிலும், துப்புரவுப்பணியாளர்கள் பணிபுரிந்தனர்.திருப்பூரில், தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். வழக்கமாக தீபாவளி முடிந்த சில நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு குப்பைகள் பரவலாக காணப்படும். அவற்றை அப்புறப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். நேற்று, 850 டன் அளவுக்கு, குப்பைகள் சேர்ந்துள்ளன. இவற்றில், 200 டன் பட்டாசு குப்பைகள்.குப்பைகளை அகற்றும் பணியில், 1,800 துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கென, நான்கு மண்டலங்களிலும், காலை, 6:30 முதல் மதியம், 1:30 மணி; மதியம், 2:30 முதல், 5:00 மணி வரை 'ஷிப்ட்' முறை பின்பற்றப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தீபாவளியின்போது, குப்பைகளைச் சேகரிப்பதில் கூடுதல் சுமை ஏற்படும். பட்டாசுகளால், காகித குப்பைகள் அதிகம் சேகரிக்க வேண்டி இருக்கும். தொகுப்பு பட்டாசுகள், இரவு நேர பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளதால், அட்டை குப்பைகள் அதிகம் காணப்பட்டன.மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், பட்டாசு குப்பைகளை சிலர் கழிவுநீர் ஓடைகளில் வீசி எறிந்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த கூடுதல் நேரம் பிடிக்கிறது. நகரில், சேகரிக்கப்பட்ட, குப்பைகள், முதலிபாளையம் அருகேயுள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டது. தவிர, நேற்று இரவு, ஒரு நாள் மட்டும் துாய்மைப் பணியாளர்களுக்கு இரவுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE