திருப்பூர்:தீபாவளி விடுமுறைக்கு பின், வெளிமாவட்டங்களில் இருந்து, புதிய தொழிலாளர் ஏராளமானோர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், பணிபுரிவதற்காக, வர உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கின்போது, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், பணிபுரிந்த, வெளி மாவட்ட தொழிலாளர் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுக்குப்பின், கடந்த மே மாதம், வெளி மாவட்ட தொழிலாளர் பலர் மீண்டும் திருப்பூர் வரத் துவங்கிய நிலையில், வெளிமாநில தொழிலாளர் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து, ஆடை தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. தொழிலாளர் பற்றாக்குறை, நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
தற்போது, தொழிலாளர்களுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 19ல் மீண்டும் இயக்கத்தை துவக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.பொதுவாகவே, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், 30 சதவீதம் வரை தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. ஸ்ரீபுரம் அறக்கட்டளை, பொதிகை மனிதவள அமைப்பு இணைந்து, தமிழக தொழிலாளரை கொண்டு, பின்னலாடை துறையின் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக, ஒளிவிளக்கு என்கிற பெயரில் ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில், திருப்பூர் பின்னலாடை துறைக்கு உகந்த, 40 லட்சம் தொழிலாளர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், இடம்பெயர தயாராக உள்ளோரை, திருப்பூர் அழைத்துவருவது; திருப்பூருக்கு வர விரும்பாத, அதேநேரம் ஆடை உற்பத்தி துறையில் பணிபுரிய விரும்புவோர் அதிகமுள்ள இடங்களில், பின்னலாடை நிறுவன விரிவாக்க கிளைகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடத்துவருகின்றன.தீபாவளி விடுமுறைக்குப்பின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, புதிய தொழிலாளர் ஏராளமானோர், திருப்பூருக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒளிவிளக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் கூறியதாவது:கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தினமும் நுாறு பேர் வரை, போனில் தொடர்புகொள்கின்றனர்; பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவதாக தெரிவிக்கின்றனர். திருப்பூர் வர உள்ள இவர்களை, திருப்பூரில் உரிய நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர். இவர்களை, பின்னலாடை நிறுவனத்தினர் வரவேற்க தயாராக உள்ளனர்.
கொரோனாவால், வெளி மாவட்டங்களில் பயிற்சி மையம் அமைக்கும் பணிகளை, பின்னலாடை நிறுவனங்கள் ஒத்திவைத்திருந்தன. தற்போது, அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் துவங்கியுள்ளன. தொழிலாளர் மிகுந்த பகுதிகளில், உள்ளூர் முதலீட்டாளர்கள் உதவியுடன், பயிற்சி மையம் அமைக்கப்படும்.இம்மையத்துக்கு தேவையான இயந்திரங்களை, பின்னலாடை நிறுவனமே வழங்கும்.
ஒரு மாதம் பயிற்சி முடித்து, திறன் மிக்க தொழிலாளர்கள், பயிற்சி மையத்தை இயக்கும் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியில் இணைவர்.தொழிலாளர் அதிகமுள்ள பகுதிகளில், தையல் முதல் பேக்கிங் வரையிலான விரிவாக்க கிளைகளை நிறுவுவதற்கும், பின்னலாடை நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். பலவித முயற்சிகள் மூலம், தொழிலாளர் தேவை பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE