திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில், மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் செருப்புகள், ஜோடி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் திருவனந்தபுரம் பூஜப்பூரா மத்திய சிறை கைதிகள், குறைந்த செலவில் தரமான உணவு மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரிக்கின்றனர். சிறை வளாகத்துக்கு வெளியே உணவகம், அழகு நிலையம் ஆகியவையும், கைதிகளால் நடத்தப்படுகின்றன.
இயற்கை விவசாய முறையில் தயாரித்த காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது.மத்திய சிறை அருகில், கைதிகள் ஒரு 'பெட்ரோல்' விற்பனை நிலையத்தையும் நடத்துகின்றனர். கைதிகள் உருவாக்கும் பிரியாணி, 'ஆன்லைன்' முறையில் பொதுமக்களின் வீடுகளை சென்றடைகிறது.கைதிகளின் நலன் கருதி, மாநில சிறைத் துறை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்படி, சிறையில் செருப்புகள் தயாரிக்கும் பிரிவு உருவாகி உள்ளது. இவர்கள் தயாரித்த செருப்புகள் விற்பனையை, சிறை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், சிறைத் துறை டி.ஜி.பி., ரிஷிராஜ் சிங் துவங்கி வைத்தார்.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் நாயர் கூறும்போது, ''இந்த செருப்புகளுக்கு, 'சுதந்திர நடை' என, பெயரிட்டுள்ளோம். ஒரு ஜோடி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். விரைவில் கேரளாவின் அனைத்து பகுதி கடைகளிலும் விற்பனை செய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE