பாலக்காடு; வாளையாரில் வெடிபொருட்களுடன் சென்ற லாரியை கேரள போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல், வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கிறது. இதனால், மாநிலம் முழுதும் போலீசார் சிறப்பு வாகன தணிக்கை நடத்தி வருகின்றன.பாலக்காடு எஸ்.பி., சுஜித் தாஸ் அறிவுரைபடி, வாளையார் போலீசார், நேற்று அதிகாலை, கோவை- - பாலக்காடு சாலையில், வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவை பகுதியில் இருந்து தக்காளி லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் இருந்தவர்கள் முரண்பட்ட தகவலை கூறியதால், போலீசார் லாரியை முழுமையாக சோதனை செய்தனர்.அப்போது, பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.தக்காளி பெட்டிகளுக்கு அடியில், 35 பெட்டிகளில் 7,000 ஜெலட்டின் குச்சிகளும், 7,500 டெட்டனேட்டர்களும் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த லாரி டிரைவர் ரவி, 38, திருவண்ணாமலை செங்கம் கோட்டூரை சேர்ந்த பிரபு, 30 ஆகியோரை, கேரளா போலீசார் கைது செய்தனர். லாரி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாளையார் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கூறுகையில், ''பறிமுதல் செய்த வெடிபொருட்கள், சேலத்தில் இருந்து கேரள மாநிலம், அங்கமாலிக்கு கடத்திச் செல்வது விசாரணையில் தெரிந்தது. இந்த வெடிபொருட்களுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE