தஞ்சாவூர்: கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீண்ட தென்னை விவசாயிகளை, தென்னை மரத்தில், பூச்சி தாக்குதல் மீண்டும் நிலை குலைய வைத்துள்ளது.
கடந்த, 2108 நவம்பர்,15ம் தேதி நள்ளிரவு துவங்கி, 16ம் தேதி காலை வரை வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில், 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேரோடும், பாதியாகவும் முறிந்து விழுந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் மட்டும், 45.7 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன.இந்த சம்பவம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்காக, புதிய தென்னங்கன்றுகளை நட்டனர். ஆனால், தென்னங்கன்றுகள் வைத்த விவசாயிகளுக்கு, மானியங்கள் முறையாக கிடைப்பதில்லை. இந்நிலையில், தென்னையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு தென்னை மரங்கள் பாதிக்கப்படுகிறது.இது குறித்து, தென்னை விவசாயி அடைக்கலம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இரண்டு ஆண்டுகளில் பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில், விழுந்த தென்னை மரங்களுக்கு பதிலாக, 90 சதவீதம் தென்னைங்கன்றுகள் நடவு செய்து விட்டனர்.நடவு செய்யப்பட்டு, ஒரு ஆண்டு கடந்துள்ள புதிய மரங்களில், காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. குருத்து அழுகல் நோயினாலும் பாதிக்கப்பட்டு, மரங்கள் நாசமாகி விட்டன.எனவே, பூச்சி நோய் தாக்கத்தை கட்டுப் படுத்துவதற்கும், பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் வழிகளை தெரியப்படுத்த, அதற்கான மருந்தையும் இலவசமாக வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
தென்னை வாரியம்
தென்னை விவசாயி காந்தி கூறியதாவது:மத்திய அரசின் தென்னை வாரியம், கேரளா மாநிலம் கொச்சியிலும், தமிழகத்திற்கான மண்டல அலுவலகம் சென்னையிலும் தான் உள்ளன.இதனால், தென்னை விவசாயிகள், சாகுபடி குறித்த தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், வளர்ச்சி திட்டங்களுக்கான தகவல்கள், மானியங்கள் போன்றவை பெறுவதில் சிக்கல் உள்ளது.தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் மற்றும் துணை இயக்குனர் உள்ளிட்ட அலுவலகங்கள், வளர்ச்சி வாரிய அலுவலகங்களை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE