'மதுரை மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் சிக்காத, கிரானைட் குவாரிகளையாவது திறக்க அனுமதிக்க வேண்டும்' என, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், 175 க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டன. முறைகேடாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம், சகாயம் ஐ.ஏ.எஸ்., தலைமையில், விசாரணை குழுவை நியமித்தது. அக்குழு, 2015ல் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
குவாரிகளுக்கு தடை
இதற்கிடையில், முறைகேடு புகார்கள் எதிரொலியாக, 2012 முதல் கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு அனுமதிக்கவில்லை. தற்போது, அரசு, தனியார் பயன்பாட்டிற்கு ஜல்லிகற்களை வெட்டி எடுக்க, கல் குவாரிகளுக்கு மட்டும், மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாததாக கூறி, குற்ற வழக்குகளில் சிக்காத, 91 கிரானைட் குவாரிகளின் உரிமத்தையும், மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து விட்டது. இதனால், மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்படவில்லை.
குவாரிகள் மூடப்பட்டு, எட்டாண்டுகள் ஆகும் நிலையில், நீதிமன்ற வழக்குகளை காட்டி, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போயிருப்பதாக, குவாரி நிறுவனத்தினர் கூறி வருகின்றனர்.
கற்பனையாக கணக்கீடு
இதுகுறித்து, மதுரை அசோசியேஷன் ஆப் சதர்ன் ஸ்டோன் இன்டஸ்டிரீஸ் தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணையதளமான, www.commerce.nic.in ல், ஏற்றுமதியான கிரானைட் புள்ளிவிவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த, 1996 - 97 முதல், 2012 - 13 வரையிலான, 17 ஆண்டுகளில், நாட்டின் மொத்த கிரானைட் ஏற்றுமதி, 52 ஆயிரத்து, 374 கோடி ரூபாய். அதில், தமிழகத்தின் பங்கு, 6,808 கோடி ரூபாய்.
தமிழகத்தில் கிரானைட் உற்பத்தி, 19 மாவட்டங்களில் நடக்கிறது. அதில், மதுரையின் பங்கு, 41 சதவீதம். மத்திய அரசின் புள்ளி விபரப்படி, மதுரையிலிருந்து, 17 ஆண்டுகளில், 2,798 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
ஆனால், ஏற்கனவே மதுரை கலெக்டராக இருந்த ஒருவர், கிரானைட் முறைகேடால், 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார். அதற்கு பிறகு ஒரு குழு, 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றது. மற்றொரு குழுவோ, 9000 கோடி ரூபாய் என்றது. இதிலிருந்தே, முறையான புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில், இழப்பீட்டை கணக்கீடு செய்யாமல், கற்பனையாக கணக்கீடு செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.
குவாரிகளுக்கு அனுமதி
மதுரை மாவட்டத்தில், குவாரிகள் செயல்படாததால், 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கிரானைட் தொழிலுக்கு உரிமையாளர்கள் வாங்கிய கடன்களை, திருப்பி செலுத்த முடியாத நிலையுள்ளது. சர்பாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, குற்ற வழக்குகளில் சிக்காத கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைதி காக்கும் அரசு
அதிகாரிகளும், கிரானைட் குவாரிகள் விஷயத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.கிரானைட் விஷயத்தில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், பல லட்சம் முறைகேடு என மதிப்பிடப் பட்டதாலும், அரசும் எதற்கு நமக்கு வம்பு என, எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
எழுந்துள்ள எதிர்ப்பு
கிரானைட் குவாரிகளை அனுமதிக்க வேண்டும் என, உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அவற்றை அனுமதிக்க கூடாது என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, வேலைவாய்ப்பு, வரி வருவாய், இயற்கை வளம், எழுந்துள்ள எதிர்ப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, எல்லா தரப்பினரையும் அழைத்து பேசி, தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE