சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல், 41 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகளுடன், பக்தர்களுக்கு அனுமதிஅளிக்கப்படுகிறது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு பதவிக்காலம் நிறைவு பெறும் சபரிமலை மேல்சாந்தி, சுதிர் நம்பூதிரி கோவில் நடை திறந்து, தீபம் ஏற்றினார். பின், 18-ம்படி வழியாக சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.தொடர்ந்து, 18-ம் படிக்கு கீழே, இருமுடி கட்டுடன் வந்திருந்த, புதிய மேல்சாந்தி சபரிமலை- ஜெயராஜ் போற்றி, மாளிகைப்புறம்- ரெஜிகுமார் ஆகியோரை கைப்பிடித்து கோவில் முன்புறம் அழைத்து வந்தார்.
இரவு, 7:00 மணிக்கு ஜெயராஜ் போற்றிக்கு அபிஷேகம் நடத்திய தந்திரி கண்டரரு ராஜீவரரு, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லி கொடுத்து கோவிலுக்குள் அழைத்து சென்றார். ரெஜிகுமாருக்கும் அபிஷேகம் நடத்தி, கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகம் தொடங்கி வைப்பார். இந்த சீசனில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய முடியாது. ஊழியர்கள் பக்தர்களிடம் நெய் பெற்று, அதை அபிஷேகத்துக்கு கொடுப்பர். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.எல்லா நாட்களிலும், கணபதிஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், உச்சபூஜை. தீபாராதனை, அத்தாழபூஜை ஆகியவற்றுடன், படிபூஜை, உதயாஸ்தமான பூஜை போன்ற, சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வார நாட்களில், ஆயிரம் பேரும், சனி , ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். பம்பையில் குளிக்க முடியாது. சுவாமி ஐயப்பன் ரோடு மட்டும், பயன்படுத்தப்பட வேண்டும். சன்னிதானத்தில் தங்கக்கூடாது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிலைமையை கண்காணித்த பின் , சில நாட்களுக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.'இ பாஸ்' கட்டாயம்சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று, 'இ பாஸ்' இல்லாமல் குமுளி வழியாக செல்ல முயன்ற அய்யப்ப பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்தாலும், 'இ பாஸ்' கட்டாயம் கொண்டு வர வேண்டும் என, குமுளியில் உள்ள கேரள போலீசார் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE