திருப்பூர்:தமிழகத்தில், மெகா ஆயத்த ஆடை நகரை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில், வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன், ஜவுளித்துறையினர் உள்ளனர்.வரும் 2021 - 22ம் நிதியாண்டு பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக, பொதுமக்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க, மத்திய நிதியமைச்சகம், அழைப்பு விடுத்துள்ளது. கோவை, திருப்பூர் தொழில்துறையினர், ஜவுளித்துறை மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை, அனுப்பிவைக்க உள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், ''பனியன் தொழிலாளர் பயன்பாட்டுக்காக, திருப்பூரில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் வீடு கட்டுவதற்கான அறிவிப்பு இடம்பெறவேண்டும். ''சர்வதேச ஆடை வர்த்தக சந்தையில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு, தொழிலாளர் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்க வேண்டும். திருப்பூரை மையமாக கொண்டு, பின்னலாடை துறை வாரியம் மற்றும் சர்வதேச தரத்தில் ஆய்வுக்கூடங்களை உருவாக்க வேண்டும்,'' என்றார்.இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''நாட்டின் பல்வேறு பகுதிகளில், 'மெகா ஆயத்த ஆடை நகரங்களை' உருவாக்கவேண்டும் என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மெகா ஆயத்த ஆடை உற்பத்தி நகரத்தை உருவாக்கவேண்டும். நுால் முதல் ஆடை தயாரிப்பு வரை அனைத்து மூலப்பொருட்கள், சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யவேண்டும். மத்திய பட்ஜெட்டில், இதற்கான அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE