சென்னை: வருவாய் துறையின், 'ஆன்லைன்' நில அளவை வரைபட சேவை முடங்கியுள்ளதால், பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், நிலம் தொடர்பான உரிமை ஆவணங்களை, 'ஆன்லைன்' வழியில் பெறும் சேவையை, வருவாய் துறை வழங்குகிறது. இதன்படி, பொது மக்கள் பட்டா விபரங்களை, ஆன்லைன் முறையில் சரி பார்க்கவும், பிரதி எடுக்கவும் முடியும்.இத்துடன், சம்பந்தப்பட்ட நிலத்தின் நில அளவை வரைபடம், 'அ' பதிவேடு விபரங்களையும், ஆன்லைனில் பெறலாம்.
இதனால், தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைவது வெகுவாக குறைந்துள்ளது.இதில், 'சர்வே' எண் வாரியாக பட்டா விபரங்களை பெறும் போது, அதற்கான, எப்.எம்.பி., எனப்படும், நில அளவை வரைபடம் கிடைக்கும். சில மாதங்களாக, இச்சேவை முடங்கியுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:மக்களுக்காக நல்ல நோக்கத்தில், ஆன்லைன் சேவையை அரசு துவக்கியது. ஆனால், வருவாய் துறையினர், இச்சேவைகளை முடக்கும் நோக்கிலேயே செயல்படுவதாக தெரிகிறது.
பட்டாவுடன் நில அளவை வரைபடம் பெறும் சேவை, 10 மாதங்களாக முடங்கியுள்ளது. ஏற்கனவே, ஒரு சர்வே எண்ணுக்கு கிடைத்த நில அளவை வரைபடம், தற்போது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் துறையினர் இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா காலத்தில் மக்கள், அரசு அலுவலகங்களில் குவியாமல் தடுக்க, இதுபோன்ற சேவைகள் முறையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE